உலக ஒற்றுமைக்கு வழிகாட்டும் ஆரோவில்


உலக ஒற்றுமைக்கு வழிகாட்டும் ஆரோவில்
x
தினத்தந்தி 27 Feb 2018 2:20 PM IST (Updated: 27 Feb 2018 2:20 PM IST)
t-max-icont-min-icon

நாளை (பிப்ரவரி 28) ஆரோவில் நகரம் உருவான தினம். அந்த நகரம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

புதுச்சேரி அருகே அமைந்துள்ள சர்வதேச நகரம் ஆரோவில். இது, ஐ.நா.வின் யுனெஸ்கோ உதவியுடன் மாபெரும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட பன்னாட்டு கிராமிய நகர சங்கமமாகும். அமைதியும், உயிரோட்டமான ஜீவனும் ஒருங்கிணைந்து அமைந்த இந்த ஆரோவில்லுக்கு சென்றாலே மனிதனுடைய கவலைகள் மாயமாகிவிடும். உலக நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், சாதி, மதம், அரசியல் மற்றும் நாடுகளின் வேறுபாடுகளைக் கடந்து ஒரே சமூகமாக இங்கு வாழ்கின்றனர். உண்மையாகவே பன்மையில் ஒருமை தத்துவம் இங்கு தான் நிலைத்தோங்குகிறது.

மானிடத்தின் ஒருமைப்பாட்டையும், மனித நேயத்தின் இயல்பையும் மெய்யாக்குவதே ஆரோவில்லின் அடிப்படை நோக்கமாகும். பழமை, நவீனம், சமகாலம், எதிர்காலம், புதியவை, உண்மையை நோக்கிய தேடல், மெய்ப்பொருள் காண்பது என்ற தத்துவங்களின் அடிப்படையில் ஆரோவில் அமைக்கப்பட்டது. உயிரோட்டமான உணர்வை கண்டறிய முயற்சி மேற்கொள்ளும் இடம் என அரவிந்தர், அன்னை ஆகியோர் வரைபடத்தை தொட்டுக்காட்டிய இடம் தான் ஆரோவில். இந்த இடம் கடுவெளிச் சித்தர் தவம் செய்த பூமி என்று நம்பப்படுகிறது. இங்கு சிவன் ஆலயங்களும், நாட்டுப்புறத் தெய்வக் கோவில்களும் உள்ளன.

இந்த நகரத்தை உருவாக்க 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது. பல பகுதிகளிலிருந்தும், தமிழகம், புதுச்சேரியிலிருந்தும் 5 ஆயிரம் பேர் குழுமினர். அதன் மையத்திலிருந்த பெரிய ஆலமரத்திலிருந்து சிறுதொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லால் ஆன ஒரு தாழியில் உலகின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களில் இருந்தும் பிடி மண் எடுத்து வரப்பெற்று இந்த இடத்தில் ஒரு சேர சேர்க்கப்பட்டது.

இந்த பன்னாட்டு நகரில் 50 ஆயிரம் பேர் வரை வசிப்பதற்காகத் திட்டமிடப்பட்டது. நகரத்தின் மத்தியில் ஆரோவில்லின் மாத்ரி மந்திர் அமைக்கப்பட்டது. அதனைச் சுற்றி சோலை வனங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மத்தியப் பகுதிக்கு பேரமைதி கேந்திரம் என்று பெயர். நவீன கட்டிடக் கலைகளின் இருப்பிடமாக ஆரோவில் திகழ்கிறது. பசுமை இயற்கைச் சூழ்நிலையில் குடியிருப்பு வீடுகள் அமைந்துள்ளன.

பன்னாட்டு மைய அரங்கத்தில் அனைத்துலக இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளை கற்பிக்கும் கலாசாலைகளும், கலையரங்குகள், நூலகங்கள், பயிற்சிக் கூடங்கள், கல்வி மற்றும் ஆய்வுக் கூடங்கள், விளையாட்டரங்குகளும் உள்ளன. இந்த இடத்தில் ஒவ்வொரு நாட்டின் அரங்கமும் தனித்தனியாக உள்ளது. முதல் அரங்கமான இந்திய அரங்கம் பாரத் விலாஸ் என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மரபு மையமும் அமைந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களின் அரங்குகளும் நிறுவப்பட்டு வருகின்றன. திபெத் கலாசார மையமும் இடம் பெற்றுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்போடு, மாசு ஏற்படக்கூடாத தொழிற்கூடங்கள் பெரிய, சிறிய, நடுத்தர அளவில் செயல்படுகின்றன.

ஆரோவில்லின் முதல் மொழியாக தமிழ், பிரஞ்சு, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் உள்ளன. தனியாக ஆரோவில் ரேடியோவும் இயங்குகிறது. ஆரோவில் செய்தி மடல் 20 ஆண்டுகளாக தமிழில் வெளிவருகிறது. இந்த பகுதியில் பச்சை பசேலென்று மரங்கள், பூங்காக்கள், பூந்தோட்டங்கள் என நிறைந்திருக்கின்றன. ஐம்பது நாடுகளுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு சேர மகிழ்ச்சியோடும், அமைதியாகவும் வாழ்கின்றனர்.

முற்றிலும் வறண்ட செம்மண் 50 நாட்டு மக்களின் உழைப்பின் காரணமாக செழிப்பானது. இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, மாற்றுச் சக்தி, ரசாயன உரங்களை தவிர்த்தல் என்ற நிலையில் விவசாயம், கலைப் பொருள் தயாரிப்பு போன்ற பணிகளை செய்துவருகின்றனர். நேர்மையான உழைப்பே இவர்களுடைய தாரக மந்திரம். ஆரோவில் மட்டுமல்லாமல் இதை சுற்றியுள்ள ஏனைய கிராம வளர்ச்சிக்கும் இவர்கள் அக்கறைகாட்டி உதவுகின்றனர். அதுபோல, கடற்கரைப் பகுதிகளில் தொண்டு நிறுவனப் பணிகளை ஆற்றுகின்றனர்.

சுனாமிகா, ஸ்மால் ஸ்டெப்ஸ், வெல்பேப்ர் என திட்டப்பணிகள் மூலம் ஆரோவில் தன் அருகேயுள்ள கிராமங்கள் முன்னேற வேண்டிய பணிகளை ஆற்றுகிறது. ஆரோவில் அறக்கட்டளையின் 170-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் பல ஊர்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

மறுஉற்பத்தி செய்யவல்ல சக்திகள், காற்று மூலம் மின்சார உற்பத்தி, உயர்தர எந்திரங்கள், தகவல் தொகுப்புகள் ஆகியவற்றின் தனித்துவமுடைய நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இயற்கையை மாசுபடுத்தாத சிறு உலோகத் தொழிற் கூடங்கள், உயர்தர தொழில்நுட்ப வசதி கொண்ட ஒலிப்பதிவுக் கூடம், விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தின்போது உட்கொள்ளும் ஸ்பிருலினா (உணவுப் பாசி) உற்பத்தி செய்யும் நிறுவனம், சுடுமனைகள் மற்றும் கைவினை உற்பத்தித் தொழிற்கூடங்கள் எனப் பல்வகை நிறுவனங்கள் சிறப்புறச் செயல்படுகின்றன.

ஆரோவில் குழந்தைகளுக்கான 5 பள்ளிகள், 4 சிறார் பள்ளிகள், 5 முன் மழலையர் பள்ளிகள் இவற்றோடு ஆரோவில் பகுதியைச் சுற்றிலும் பல பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம இளைஞர்கள் தொழிற்கல்வி கற்றுக் கொள்வதற்கென ஒரு பல்தொழிற் பள்ளியும், பணிமுடித்துத் திரும்பும் தொழிலாளர்களுக்கான இளைஞர்கள் கல்வி மையமும் மகளிர்க்கென வாழ்க்கைக் கல்வி மையமும் இயங்குகின்றன.

ஆரோவில் நூலகத்தில் உலக மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேலான நூல்கள், குறுந்தகடுகள் உள்ளன. இந்திய மற்றும் பிறநாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழிக்கூடமும் இங்கு இடம்பெற்றுள்ளது. ஆரோவில் ஆவணக் காப்பகம் பல தரவுகளை ஆய்வுசெய்ய உதவுகின்றது. நடனம், நாடகம், இசை, ஓவியம், யோகா, தற்காப்பு கலை போன்ற கலை சம்பந்தமான பயிலரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை முகாம்கள், அறிவியல் கண்காட்சிகள் எப்போதும் நடந்த வண்ணம் உள்ளது.

இங்குள்ள கலைஞர்கள் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்று தங்களுடைய கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். வெளிநாட்டுத் தலைவர்களும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர்களும், இந்திய குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மத்திய, மாநில அமைச்சர்கள், பிறநாட்டு அதிபர்கள், தூதர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் பலரும் வந்து செல்லும் சிறப்புக்குரிய இடம் ஆரோவில்.

இப்படியான ஆரோவில் மனித இனத்தின் ஒற்றுமையை நிலைநாட்டவும், அதை பரிசோதிக்கும் சாலையாகவும் விளங்குகிறது. வேற்றுமையில் மனித இனத்தின் ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம். இந்த நோக்கம் எதிர்காலத்திலும் வெற்றி பெற வேண்டும்.

 - வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Next Story