மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலெக்டர் ஆய்வு திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலெக்டர் ஆய்வு திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 27 Feb 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வருகிற 4–ந் தேதி திருவிழா தொடங்க உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்தி, திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா வருகிற 4–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா மார்ச் 13–ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இதையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று மண்டைக்காடு பகவதி கோவிலில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் உண்டியல் எண்ணும் இடம், சாஸ்தா கோவிலுக்கு செல்லும் சாலை, மண்டைக்காடு கடற்கரை பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர், கோவில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து சக்திசதன் மண்டபத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, கோவில் திருவிழா நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜகோபால் சுங்கரா, கல்குளம் தாசில்தார் ராஜா, குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், மண்டைக்காடு பேரூராட்சி செயல்  அலுவலர் சங்கர்கணேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story