ஈரோடு பெரியார் நகரில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி


ஈரோடு பெரியார் நகரில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 27 Feb 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெரியார் நகரில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் ஆழமான குழிகள் தோண்டப்பட்டு பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டன. ஈரோடு மேட்டூர் ரோடு, ஈ.வி.என்.ரோடு உள்பட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சத்திரோடு உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட இடங்களில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில இடங்களில் பணிகள் நிறைவடைந்தும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

ஈரோடு பெரியார்நகர் பகுதியில் காந்திஜி ரோடு பிரிவில் இருந்து ஈ.வி.என்.ரோடு சந்திப்பு வரை செல்லும் சாலையில் பல மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டன. அங்கு குழாய்கள் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டு விட்டன. ஆனால் இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை.

இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் அந்த வழியாக செல்லும்போது புழுதி பறக்கிறது. சாலையோரங்களில் உள்ள வீடுகள், கடைகள், மரங்களில் புழுதி படிந்து இருப்பதை காணமுடிகிறது. மேலும், சாலையோரங்களில் ஏராளமான கடைகள் உள்ளன. எனவே சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. மேலும் அதிகமான புழுதி பறப்பதால் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக வீடுகளுக்கு உள்ளேயும் தூசி படிகிறது. இதன் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாலையை சீரமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.

Next Story