அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு


அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Feb 2018 4:30 AM IST (Updated: 28 Feb 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே அரசு பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர் அங்கு சத்துணவு தயாரிக்கும் பணியை பார்வையிட்டார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வீராசனூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் சமையல் அறை கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட கலெக்டர் மலர்விழி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்விழா தொடங்குவதற்கு சற்று முன்னரே அங்கு வந்த கலெக்டர் மலர்விழி ஊராட்சி தொடக்க பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள சமையல் கூடத்தையும், சத்துணவு தயாரிக்கும் பணியையும் பார்வையிட்டார். மாணவர்களுக்கு சமையல் செய்ய பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றின் இருப்பை சரிபார்த்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட சத்துணவின் தரம், முட்டையின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, சத்துணவை சுகாதாரமான முறையிலும், சுவையாகவும் சமைத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டும். சமையலறை மற்றும் சமையல் பாத்திரங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று சமையல் பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அங்கு தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். கியாஸ் இணைப்புக்கான டெபாசிட் தொகையை செலுத்தி கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சத்துணவு தயாரிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ரமணனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story