கபிஸ்தலம் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் புள்ளி மான் சாவு


கபிஸ்தலம் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் புள்ளி மான் சாவு
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் ஒரு புள்ளி மான் பரிதாபமாக இறந்தது. மற்றொரு புள்ளிமான் நாய் களிடம் சிக்காமல் தப்பி ஓடி விட்டது.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே கருப்பூர், தட்டுமால் பகுதிகளிலும், கொள்ளிட ஆற்றுப்பகுதியில் உள்ள புதர்களிலும், காடுகளிலும், மான்கள், மயில்கள், முயல்கள் போன்ற பல்வேறு விலங்கினங்கள் வசித்து வருகின்றன. தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் விட்டதால் குடிநீரை தேடியும், இரையை தேடியும் இந்த விலங்கினங்கள் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கொள்ளிடம் ஆற்றில் இருந்து இரண்டு புள்ளிமான்கள் தென் சருக்கை கிராமத்தில் குடிநீரை தேடி வந்தன. அப்போது அந்த கிராமத்தில் சுற்றித்திரியும் சுமார் 25-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள், புள்ளிமான்களை விரட்டிச்சென்று கடித்து குதறியது.

இதைக்கண்ட கிராம மக்கள் வெறி நாய்களை அடித்து விரட்டி விட்டு படுகாயத்துடன் காணப்பட்ட ஒரு புள்ளிமானை பிடித்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கபிஸ்தலம் கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமார் இரண்டு மணி நேரம் சிகிச்சையில் இருந்த அந்த புள்ளிமான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து கபிஸ்தலம் கால்நடை மருத்துவர் அங்கு வந்து இறந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மானின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மற்றொரு புள்ளிமான் நாய்களிடம் சிக்காமல் கரும்பு வயல்களில் தப்பியோடி காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது. 

Next Story