படகு என்ஜின் பழுதானதால் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு


படகு என்ஜின் பழுதானதால் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 28 Feb 2018 2:45 AM IST (Updated: 28 Feb 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

நாட்டுப்படகு


தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் கென்சன். இவர் சொந்தமாக நாட்டுப்படகு வைத்து உள்ளார். இவருடைய படகில் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த சவேரியாபிச்சை மகன் வென்சிலு(வயது 36), திரேஸ்புரத்தை சேர்ந்த சூசையா மகன் வால்டர்(56), தாளமுத்துநகரை சேர்ந்த ஆனந்த் மகன் பாலமுருகன்(26), ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி(46), தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த ஜோசப் மகன் அஜித்(21) ஆகிய 5 பேரும், கடந்த 24–ந் தேதி திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் மாலையில் பெரியதாழையில் இருந்து சுமார் 20 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு என்ஜின் பழுதடைந்தது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் 1093–க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டது.

மீனவர்கள் மீட்பு

இதைத் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கடலோர காவல்படை ரோந்து கப்பல் அபிராஜிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக ரோந்து கப்பல் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றது. அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 5 மீனவர்கள் மற்றும் படகையும் கடலோர காவல்படையினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்து, கடலோர பாதுகாப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Next Story