ஸ்டேஷன் சாலையை சீரமைக்க கோரி கொரட்டூரில் சுவாச கவசம் வழங்கி ஆர்ப்பாட்டம்


ஸ்டேஷன் சாலையை சீரமைக்க கோரி கொரட்டூரில் சுவாச கவசம் வழங்கி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:45 AM IST (Updated: 28 Feb 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கொரட்டூரில் ஸ்டேஷன் சாலையை சீரமைக்க கோரி, சுவாச கவசம் வழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அம்பத்தூர்,

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்டது, 84-வது வார்டு கொரட்டூர் ஸ்டேஷன் ரோடு. இந்த சாலை கடந்த 8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டுங்குழியுமாக இருந்து வந்தது. இந்த சாலையை சீரமைத்து தருமாறு அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலமுறை போராட்டம் நடத்திய பின்பு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சீரமைத்து, தார் சாலை போட மாநகராட்சி முடிவு செய்து பணியை தொடங்கியது.

அப்போது குண்டுங்குழியுமான சாலையை சமன்படுத்தி தார் சாலை போட ஜல்லிக்கற்களை கொட்டினர். 8 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்களை மட்டுமே கொட்டிவிட்டு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அதன் மேல் தார் சாலை போட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் 2 கி.மீ. தூரம் உள்ள இந்த சாலையை பயன்படுத்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். 8 மாதங்களாக இந்தப் பகுதி மக்களும், இந்த சாலையில் இருபுறமும் கடை வைத்துள்ள வியாபாரிகளும், பல்வேறு நல சங்கங்களும், கட்சிகளும் பலகட்ட போராட்டம் நடத்தினர். ஆனால் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் இந்த சாலையை போடாமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.

இந்த சாலையை அம்பத்தூர், புதூர், கள்ளிகுப்பம், சண்முகாபுரம், கொரட்டூர், மேனாம்பேடு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினம்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டியபடி இந்த சாலை இருப்பதால் சாலை முழுவதும் தூசியும், புழுதியும் பறக்கிறது. அத்துடன், அருகில் உள்ள குடியிருப்புகள், அலுவலகங்கள், கடைகள் என எங்கும் புழுதியும், தூசியும் படிந்து பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே ஸ்டேஷன் சாலையில் உடனே தார் சாலை போட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்த சாலையில் உள்ளவர்களுக்கும், பயணம் செய்கிறவர்களுக்கும் நேற்று காலையில் இருந்து துணி கொண்டு தயாரிக்கப்பட்ட சுவாச கவசங்களை வழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுபற்றி இந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் கூறும்போது, “நாங்கள் பலகட்ட போராட்டம் நடத்தியும் அரசும், மாநகராட்சியும் இந்த சாலையை போடாமல் இருக்கின்றன. இதே நிலை நீடித்தால், பொதுமக்களாகிய நாங்கள், வியாபாரிகள், பொது நல சங்கம் ஆகியோரும் சேர்ந்து பணம் வசூல் செய்து இந்த சாலையில் தார் போட்டு விரைவில் சீரமைப்போம்” என்று குறிப்பிட்டனர். 

Next Story