நாராயணவனம் அருகே பஸ் - கார் மோதல்; புதுப்பெண் உள்பட 3 பேர் பலி


நாராயணவனம் அருகே பஸ் - கார் மோதல்; புதுப்பெண் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

நாராயணவனம் அருகே பஸ் - கார் மோதிய விபத்தில் புதுப்பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 60). இவரது மனைவி தமிழரசி (55). இவர்களது மகள் அமுதவள்ளி (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா (65) என்பவரது மகன் இளங்கோ சதீஷ் (35) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும், சாமி சன்னதியில் புதிய தாலி மாற்றிக்கொள்ளவும் அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

நேற்று முன்தினம் உலகநாதன், தமிழரசி, அமுதவள்ளி, இளங்கோ சதீஷ், சகுந்தலா ஆகியோர் திருப்பதிக்கு காரில் சென்றனர். காரை விழுப்புரத்தை சேர்ந்த கண்ணதாசன் (25) என்பவர் ஓட்டினார்.

ஆந்திர மாநிலம் நாராயணவனம் அருகே தம்பூர் என்ற இடத்தில் செல்லும்போது திருமலையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில பஸ் இவர்களது கார் மீது மோதியது.

இதில் கார் நசுங்கியது. இந்த விபத்தில் புதுப்பெண் அமுதவள்ளி, கார் டிரைவர் கண்ணதாசன் ஆகிய இருவரும் காருக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். காரில் பயணம் செய்த உலகநாதன், இளங்கோ சதீஷ், சகுந்தலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தமிழரசி லேசான காயம் அடைந்தார். பஸ்சை ஓட்டிவந்த டிரைவர் ரகமதுல்லா என்பவரது இடது கை உடைந்தது.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சகுந்தலா பரிதாபமாக இறந்தார்.

புதுமாப்பிள்ளை இளங்கோ சதீஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து புத்தூர் இன்ஸ்பெக்டர் கொண்டய்யா, சப்-இன்ஸ்பெக்டர் தஸ்தகீர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story