தூத்துக்குடியில், கணவரால் உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை


தூத்துக்குடியில், கணவரால் உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Feb 2018 2:30 AM IST (Updated: 28 Feb 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கணவரால் உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்ட பெண் உயிர் இழந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கணவரால் உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்ட பெண் உயிர் இழந்தார். இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டீ மாஸ்டர்

தூத்துக்குடி டி–சவேரியர்புரம் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பை சேர்ந்தவர் அன்பு அய்யமுத்து (வயது 52). இவர் அதே பகுதியில் உள்ள கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (46). இவர்களுடைய மகள் சித்ரா, கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு அருகே ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இதனால், சாந்தி அடிக்கடி மகள் வீட்டுக்கு சென்று வந்தார். இதனை அன்பு அய்யமுத்து கண்டித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 25–ந்தேதி இரவு மகள் வீட்டுக்கு சாந்தி சென்று வந்தார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

மண்எண்ணெய்

ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே அன்பு அய்யமுத்து வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து சாந்தி மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் உடல் கருகிய சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்புஅங்கமுத்துவை கைது செய்தனர்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனையடுத்து தாளமுத்துநகர் போலீசார், இந்த சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம்

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட அன்பு அய்யமுத்து போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது;–

எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் சித்ராவை கணேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தேன். ஆனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவள், தனது கணவனை பிரிந்து என் வீட்டுக்கு அருகே ஒரு வாடகை வீட்டில் குடியேறினாள். அவளிடம் நான் பலமுறை, நீ கணேசுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவள் என் பேச்சை கேட்கவில்லை. மேலும் எனது மனைவி சாந்தியும் அடிக்கடி அவள் வீட்டுக்கு சென்று வந்தார். இதனால் சாந்தியை கண்டித்தேன். இதுதொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு எனக்கும், சாந்திக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை சாந்தி மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினேன். பின்னர் அங்கு இருந்து தப்பிவிட்டேன். அந்த பகுதியில் மறைந்து இருந்த என்னை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story