காற்றாலை மோசடி வழக்கில் சமரச தீர்வுக்கு வாய்ப்பு - சரிதாநாயர் பேட்டி


காற்றாலை மோசடி வழக்கில் சமரச தீர்வுக்கு வாய்ப்பு - சரிதாநாயர் பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2018 4:45 AM IST (Updated: 28 Feb 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

காற்றாலை மோசடி வழக்கில் சமரச தீர்வுக்கு வாய்ப்பு உள்ளதாக சரிதாநாயர் கூறினார்.

கோவை,

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக்கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரிதாநாயர், அவருடைய முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சரிதா நாயர், மேலாளர் ரவி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 20-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்தார். கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த சரிதா நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வழக்கு தற்போது 2-ஆக பிரிக்கப்பட்டு உள்ளது. என் (சரிதா நாயர்) மீதும், மேலாளர் ரவி மீதான வழக்கு தனியாகவும், பிஜூராதா கிருஷ்ணன் மீதான வழக்கு தனியாகவும் பிரிக்கப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கில் சமரசமாக செல்ல வாய்ப்பு இருக்கிறது.

கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் முன்பு நான் ஆஜராகி முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, முன்னாள் மந்திரிகள் மீது புகார் அளித்தேன். இந்த விசாரணை கமிஷன் அதற்கான அறிக்கையை கேரள அரசிடம் தாக்கல் செய்து உள்ளது.

மேலும் இந்த மோசடி தொடர்பாக தற்போது உம்மன் சாண்டி உள்பட 19 பேர் மீது திருவனந்தபுரத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. எனவே நானும் இதில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளேன். எனவே இந்த மோசடியில் தொடர்புடைய உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் மந்திரிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story