சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய தொழில் முனைவோர் முன்வர வேண்டும், அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்


சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய தொழில் முனைவோர் முன்வர வேண்டும், அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:30 AM IST (Updated: 28 Feb 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பொருட்கள் ஏற்றுமதி செய்ய தொழில் முனைவோர் முன்வர வேண்டும் என அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்தார்.

காரைக்கால்,

காரைக்கால் மார்க் கப்பல் துறைமுகத்தில் புதிய சரக்கு கப்பல் போக்குவரத்தை அமைச்சர் கந்தசாமி தொடங்கிவைத்தார். இந்தநிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, கீதா ஆனந்தன், மாவட்ட கலெக்டர் கேசவன் மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

நிலக்கரி மட்டும் ஏற்றுமதி, இறக்குமதி செய்யாமல் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மற்ற பொருட்கள் ஏற்றுமதி செய்ய தொழில்முனைவோர் முன்வர வேண்டும். காரைக்காலில் உள்ள போலகம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் வளர்ச்சி பெற்று, இந்த துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

இந்த சரக்கு கப்பல், சென்னையில் இருந்து வந்துள்ளது. இதில் மாதம் 4 முறை 40 கன்டெய்னர்களில் சிமெண்டு மூலப்பொருட்களை கொழும்புவுக்கு ஏற்றிச்செல்ல உள்ளது. தொழில்முனைவோர் கப்பல் மூலம் தங்கள் போக்குவரத்தை விரும்பினால் இதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. விமான போக்குவரத்து மற்றும் நான்கு வழிச்சாலைகள் இவை அனைத்தும் காரைக்காலுக்கு வந்தால் இன்னும் 5 ஆண்டுகளில் இத்துறைமுகம் 100 சதவீதம் பயன்பாட்டிற்கு வரும்.

மேலும், நீண்ட ஆண்டுகளாக துறைமுகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் பேசி துறைமுகத்தை வலியுறுத்துவோம். புதுச்சேரியிலும் சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதுச்சேரிக்கு முன்பு 70 சதவீதம் மத்திய அரசு நிதி வழங்கி வந்தது. தற்போது 27 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் பல திட்டங்கள் முடங்கியுள்ளது. புதுச்சேரி வந்த பிரதமரிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி இது குறித்து பேசியுள்ளார். அந்த வகையில், புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என நம்புகிறேன். எங்களுக்கும் கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், மக்கள் நலன் கருதி இருதரப்பும் சுமூகமாக ஒத்துழைக்க முன்வந்துள்ளோம். இதன்மூலம் புதுச்சேரி விரைவில் நல்ல மாற்றங்களை காணும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

Next Story