மேட்டூர் கோர்ட்டில் நடிகை குஷ்பு ஆஜர்


மேட்டூர் கோர்ட்டில் நடிகை குஷ்பு ஆஜர்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

கார் மீது முட்டை வீசப்பட்ட வழக்கு தொடர்பாக நடிகை குஷ்பு மேட்டூர் கோர்ட்டில் நேற்று நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இதையடுத்து விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு ஒத்திவைத்து மேட்டூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேட்டூர்,

நடிகை குஷ்பு தமிழக பெண்களின் கற்பு குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த வக்கீல் முருகன், நடிகை குஷ்பு மீது கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குஷ்பு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி குஷ்பு மேட்டூர் நீதிமன்றம் எண்2-ல் நேரில் ஆஜர் ஆனார்.

பின்னர் அங்கிருந்து அவர் திரும்பும்போது குஷ்பு கார் மீது ஒரு கும்பல் அழுகிய தக்காளி, முட்டை ஆகியவற்றை வீசியது. இதுகுறித்து அப்போதைய மேட்டூர் தாசில்தார் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மேட்டூர் போலீசார் அப்போதைய பா.ம.க. மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முக்கிய சாட்சியான குஷ்பு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மேட்டூர் கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் ஆஜராக கோவையில் இருந்து கார் மூலம் நேற்று மதியம் 2.40 மணிக்கு நடிகை குஷ்பு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-க்கு வந்தார். அங்கு மாஜிஸ்திரேட்டு ராஜா முன்னிலையில் அவர் ஆஜர் ஆனார்.

அப்போது நடிகை குஷ்புவிடம் பா.ம.க.வைச் சேர்ந்த வக்கீல்கள் முருகன், சதாசிவம் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்தனர். குஷ்புவிடம் வக்கீல்கள் கேள்விகள் கேட்டனர். அதன் விவரம் வருமாறு:-

வக்கீல்கள்:- நீங்கள் 2005-ம் ஆண்டு போலீஸ் பாதுகாப்புடன் தான் நீதிமன்றத்துக்கு வந்தீர்கள். அப்படி இருக்கும்போது உங்கள் மீது எப்படி அழுகிய தக்காளி, முட்டை வீசப்பட்டது?

குஷ்பு:- போலீஸ் பாதுகாப்புடன் தான் வந்தேன். நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்லும்போது என் கார் மீது ஒரு கும்பல் அழுகிய தக்காளி, முட்டைகளை வீசியது. அவர்கள் யார் என்று அடையாளம் தெரியாது.

வக்கீல்கள்:- அப்போது நீங்கள் ஏன் புகார் கொடுக்கவில்லை?

குஷ்பு:-நீதிமன்றத்தின் நேரத்தையும், என்னுடைய நேரத்தையும் வீணடிக்க விரும்பாததால் புகார் கொடுக்கவில்லை.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு ராஜா உத்தரவிட்டார்.

விசாரணை முடிந்ததும் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த குஷ்பு அங்கிருந்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் எனது கார் மீது ஒரு கும்பல் முட்டை, அழுகிய தக்காளியை வீசியது. இந்த வழக்கில் ஆஜராக கோர்ட்டுக்கு வந்தேன், என்றார்.

அப்போது நிருபர்கள், எதிர்தரப்பினர் இது பொய் வழக்கு என்கிறார்களே? என்றனர். அதற்கு குஷ்பு, மறுநாள் ஊடகங்களில் இதுபற்றிய செய்தி வெளியாகி உள்ளதே, என்றார்.

குஷ்பு மேட்டூர் கோர்ட்டில் 40 நிமிடங்கள் இருந்தார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகன், மேட்டூர் நகர தலைவர் வெங்கடேஸ்வரன் உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் குஷ்பு கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story