நாகர்கோவில் அழகம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்


நாகர்கோவில் அழகம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 28 Feb 2018 10:36 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அழகம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன்–சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான  திருவிழா கடந்த 20–ந் தேதி தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி–அம்பாள் வாகன வீதி உலா, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9–ம் நாள் விழாவான நேற்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தேர் தடம் பார்க்க எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

காலை 9 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஒரு தேரில் அம்பாளும்–சுந்தரேஸ்வரரும், மற்றொரு தேரில் விநாயகரும் எழுந்தருளினர். விஜயகுமார் எம்.பி. தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து விநாயகர் தேர் முன்செல்ல, அதை தொடர்ந்து சுவாமி–அம்பாள் தேர் இழுக்கப்பட்டது.

விநாயகர் தேரை சிறுவர்களும், சுவாமி– அம்பாள் தேரை ஆண்களும், பெண்களுமாக திரண்டு நின்று வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்தோடு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்தினவேல் மற்றும் ஜெயந்திநாதன், கோவில் ஸ்ரீகாரியம் ரமேஷ், அதிகாரிகள் ராஜ்குமார், ஜீவானந்தம், குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், சுவாமி பத்மேந்திரா, ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) 10–ம் நாள் திருவிழா நடைபெறுகிறது.


Next Story