சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் மீன்பிடி உபகரணங்கள் திருட்டு


சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் மீன்பிடி உபகரணங்கள் திருட்டு
x
தினத்தந்தி 1 March 2018 3:45 AM IST (Updated: 28 Feb 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் இருந்து மீன்பிடி உபகரணங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 250–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

இவர்கள்  அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு இரவில் கரைக்கு திரும்புவார்கள். அதன்பிறகு விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

திருட்டு

கன்னியாகுமரி ஜோசப் தெருவை  சேர்ந்த அமலதாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அமலதாஸ் தனது விசைப்படகை பார்ப்பதற்காக சென்ற போது அந்த படகில் என்ஜின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, அங்கு இருந்த வயர், இரும்பு சங்கிலி, கயிறு போன்ற மீன்பிடி உபகரணங்கள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் எனக்கூறப்படுகிறது. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து மீன்பிடி உபகரணங்களை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி விசைப்படகில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story