சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை


சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை
x
தினத்தந்தி 1 March 2018 4:30 AM IST (Updated: 28 Feb 2018 11:00 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி ரெயில் நிலையத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதை நிகழ்வை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காட்பாடி,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கின்றது. இந்த ரெயில் காட்பாடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பலனாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவையை சென்றடைகிறது. இந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நின்று செல்வது 6 மாதத்துக்கு பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தப்படுகிறது.

காட்பாடி ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான தொடக்க விழா நேற்று காலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி, எம்.பி.க்கள் அரி, செங்குட்டுவன், கலெக்டர் ராமன், லோகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோரும் கொடியசைத்தனர்.

விழாவில் சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் நவீன்குலாட்டி, கூடுதல் கோட்ட மேலாளர் மனோஜ், காட்பாடி மேலாளர் மதிவாணன் ஆவின் தலைவர் வேலழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிந்தவுடன் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறுகையில், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பேசினார்கள். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் பெருமுயற்சியால் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

அரி எம்.பி. கூறுகையில், காட்பாடியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரெயில் விட, வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைக்கப்படும். திண்டிவனம்-நகரி ரெயில் பாதை பணியை துரிதப்படுத்தி, பெரும்பான்மையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றார்.

Next Story