பெருந்துறை அருகே பரபரப்பு அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்


பெருந்துறை அருகே பரபரப்பு அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 11:37 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே பயணி இறங்கும் முன் அரசு பஸ்சை டிரைவர் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.

பெருந்துறை,

பவானியில் இருந்து பெருந்துறைக்கு காஞ்சிக்கோவில், கருமாண்டிசெல்லிபாளையம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு பவானியில் இருந்து பெருந்துறைக்கு நேற்று வந்து கொண்டிருந்தது. காலை 8.30 மணி அளவில் பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையத்திற்கு வந்தபோது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பஸ் முன்பு திரண்டார்கள்.

பின்னர் அவர்கள் பஸ்சை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தார்கள்.இதனால் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி வந்து பொதுமக்களிடம், ‘எதற்கு பஸ்சை சிறைபிடித்தீர்கள்’? என்று கேட்டார்கள். அதற்கு பொதுமக்கள், ‘கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த பெண் பாப்பாத்தி (வயது58) நேற்று முன்தினம் இரவு இந்த பஸ்சில் கருமாண்டிசெல்லிபாளையத்துக்கு செல்ல ஏறினார்.

பஸ் கருமாண்டிசெல்லிபாளையம் வந்ததும் பாப்பாத்தி கீழே இறங்க முயன்றார். ஆனால் அதற்கு முன்பே டிரைவர் பஸ்சை எடுத்துவிட்டார். இதனால் பாப்பாத்தி பஸ்சில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் அவர் லேசான காயம் அடைந்தார். கவனக்குறைவாக பஸ்சை இயக்கி டிரைவர், கண்டக்டர் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த பஸ்சை சிறைபிடித்தோம்.’ என்றனர்.

இதனால் பொதுமக்களுக்கும், டிரைவர்-கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போலீசார் கூறும்போது, ‘கவனக்குறைவாக பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்கிறோம். தற்போது பஸ்சை இங்கிருந்து செல்ல விடுங்கள்.’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் காலை 9 மணி அளவில் பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

பொதுமக்கள் திடீரென்று பஸ்சை சிறைபிடித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story