பாளை.யில் பேராசிரியர் கொலை: தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் விசாரணை


பாளை.யில் பேராசிரியர் கொலை: தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 1 March 2018 3:00 AM IST (Updated: 28 Feb 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் பேராசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் பேராசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

பேராசிரியர் கொலை

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்துள்ள கொடியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்ற கொடியன்குளம் குமார் (வயது 56), அ.தி.மு.க. பிரமுகர். இவர் பாளையங்கோட்டை அண்ணாநகர் விரிவாக்க பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மருமகன் செந்தில்குமார், அங்குள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 26-ந் தேதி குமார் வீட்டுக்குள் புகுந்த கும்பல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது அந்த கும்பல் செந்தில்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த ராஜசேகர் (30), நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த அஸ்வின் (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனிப்படை மும்பை சென்றது


நிலப்பிரச்சினையில் நடந்த இந்த கொலை தொடர்பாக ராக்கெட் ராஜா, அவருடைய அண்ணன் வக்கீல் பாலகணேசன், டாக்டர் பாலமுருகன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொலையாளிகளை பிடிக்க பாளையங்கோட்டை உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நாகராஜன், பர்னபாஸ், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 4 தனிப்படைகள் மும்பை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு விரைந்துள்ளது. போலீசார் அங்கு முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் செந்தில்குமார் உடலை வாங்க மறுத்த உறவினர்களிடம் உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து செந்தில்குமார் உடலை உறவினர்கள் நேற்று காலையில் வாங்கி தகனம் செய்தனர்.

அதிகாரிகள் விசாரணை


கொலை சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் லிஸ்டர், இனியன் ஆகியோர் நேற்று குமார் வீட்டிற்கு வந்தனர். அங்கு குமார், கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் தாய் கற்குரமுடையாள், செந்தில்குமாரின் மனைவி அனுசுயா ஆகியோரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டு அறிந்தனர். அப்போது அவர்கள் குமாரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, தாசில்தார் தங்கராஜ், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story