குழாய் உடைப்பை சரிசெய்வதில் தாமதம்: திருப்பத்தூரில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி


குழாய் உடைப்பை சரிசெய்வதில் தாமதம்: திருப்பத்தூரில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 March 2018 3:00 AM IST (Updated: 1 March 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைப்பை சரிசெய்வதில் தாமதம் ஏற்படுவதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் சிவகங்கை ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது திருப்பத்தூர் பகுதியில் உள்ள சேதமடைந்த கூட்டுக்குடிநீர் குழாய்கள் சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதால் கடந்த ஒருவாரமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். குடிநீர் குழாய்களை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் மெத்தன போக்கு காட்டுவதால், அது விரைந்து நிறைவடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் கிடைக்காததால் திருப்பத்தூர் நகர் மக்கள் தனியார் குடிநீர் விற்பனை வண்டிகளில் ஒரு குடம் ரூ.15 கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் குடிநீர் குழாய் உடைப்பினை உடனடியாக சரிசெய்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், உடைப்பை சரிசெய்ய வேண்டிய குடிநீர் வடிகால் வாரிய துறையினர் ஓரிடத்தில் உடைப்பு சரிசெய்தால் மற்றொரு இடத்தில் குழாய் உடைப்பு ஏற்படுகிறது என்று பதில் சொல்லி சமாளிக்கின்றனர். இல்லையென்றால் திருச்சியில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் தருகின்றனர்.

ஆனால் அருகில் உள்ள பொன்னமராவதி மற்றும் நெற்குப்பை பகுதிகளில் குடிநீர் வழக்கம்போல் வினியோகம் செய்யப்படுகிறது.

எனவே பேரூராட்சி துறையும், குடிநீர் வடிகால் வாரியமும் ஒருவரையொருவர் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, இணைந்து செயலாற்றி குடிநீர் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story