உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவிலில் திருக்கல்யாணம்


உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தில் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலை தென்காளகஸ்தி என்று பக்தர்கள் அழைக்கின்றனர். ராகு, கேது நிவர்த்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவில் திருவிழா, கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது. சாமி, அம்மன் உற்சவ வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை திருக்கல்யாணம் நடந்தது. இதனையொட்டி நேற்று காலையில் பெண் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக, கோகிலாபுரத்தில் இருந்து அம்மனை (ஞானாம்பிகை) அழைத்து வந்தனர். மேள தாளத்துடன், வாணவேடிக்கை முழங்க திருமண சீர்வரிசையுடன் அம்மனை டிராக்டரில் அழைத்து வந்தனர். கோவிலில் காளாத்தீஸ்வரர் (மாப்பிள்ளை வீட்டார்) சார்பில் அம்மனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காளாத்தீஸ்வரருக்கும்-ஞானாம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டு சேலை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் காளாத்தீஸ்வரருக்கு பட்டு வேட்டி அணிவிக்கப்பட்டது. அதன்பின்னர் திருமணத்துக்கான ஹோமங்கள் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கோவில் குருக்கள் நீலகண்ட சிவாச்சாரியார் மங்கல நாண் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். அதன்பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோகிலாபுரம், கம்பம், சின்னமனூர், தேவாரம், கோம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து அன்னதானம் நடந்தது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மாங்கல்யம், குங்குமம் வழங்கபட்டது. தொடர்ந்து காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகையை இங்குள்ள செல்லாயி மடத்துக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

அங்கு சாமிக்கு பால், பழங்கள் வைத்து அபிஷேகம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாலகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story