கோவையில் பரபரப்பு ஏற்படுத்திய வழக்கு: ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கோவையில் பரபரப்பு ஏற்படுத்திய வழக்கு: ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 1 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பரபரப்பு ஏற்படுத்திய ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை,

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி 2 ஏ.டி.எம்.களை உடைத்து வட மாநில கும்பல் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து தப்பி சென்றது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மவுசம்கான், அமீர், சுல்பிகர், அமித்குமார், சுபேர், முபாரக், முஸ்டாக் மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை நாமக்கல் அருகே கைது செய்தனர். டம்மி டீசல் டேங்கர் பொருத்தப்பட்ட ஒரு லாரி, 2 கார் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 8 பேரும் கடந்த மாதம் 3-ந் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் கோவை உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் சென்று ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் அரியானாவை சேர்ந்த இஸ்லாமுதீனை( வயது 45) கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.

இஸ்லாமுதீனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் இந்தியா முழுவதும் ஏராளமான ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டியதும், 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கொள்ளை கும்பல் தலைவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவிட்டார்.இதன்பேரில் உதவி கமிஷனர் பாஸ்கர், பீளமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் கொள்ளை கும்பல் தலைவன் இஸ்லாமுதீனை குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமுதீனுக்கு நேற்று வழங்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் 1 ஆண்டுக்கு ஜாமீனில் வர முடியாது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story