நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் கோவைக்கு எந்த இடம் கிடைக்கும்? டெல்லி குழுவினர் இன்று ஆய்வு


நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் கோவைக்கு எந்த இடம் கிடைக்கும்? டெல்லி குழுவினர் இன்று ஆய்வு
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 1 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

தூய்மையான நகரை தேர்ந்தெடுக்கும் திட்டத்தில் கோவையில் டெல்லி குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

கோவை,

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் தூய்மையை பராமரிப்பது குறித்து போட்டி நடத்தப்பட்டு சிறந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாநகரம் தூய்மை பட்டியலில் கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அளவில் 196-வது இடத்தையும், 2016-ம் ஆண்டு 18-வது இடத்தையும், 2017-ம் ஆண்டு 16-வது இடத்தையும் பிடித்தது. இந்த ஆண்டு அதை விட முன்னேறிய இடத்தை பிடிப்பதற்கான பணிகளில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பாரத திட்டத்தின் மூலம் தூய்மையான நகரை தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் முதல் கட்ட ஆய்வு இன்று நடக்கிறது.

கோவை மாநகரில் எங்கெங்கு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன? தனி நபர் கழிப்பிடங்கள் எங்கு கட்டப்பட்டுள்ளன? குப்பைகளை சேகரிக்கும் தொட்டிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன? மக்கும், மக்காத குப்பைகள் எங்கு பிரிக்கப்படுகின்றன? மக்கும் குப்பைகளின் மூலம் உரம் தயாரிக்கும் இடம் உள்பட தூய்மையை பராமரிப்பது பற்றிய விவரங்களை கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே தூய்மை பாரத திட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த விவரங்கள் சரியானவையா? என்று நேரில் சரிபார்ப்பதற்காக டெல்லியில் இருந்து தூய்மை பாரத ஆய்வுக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கோவை வருகிறார்கள். அவர்கள் வருகை குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்னர் கோவையின் பல்வேறு பகுதிகளில் அந்த குழுவினர் நேரிடையாக சென்று ஆய்வு நடத்த உள்ளனர். அந்த குழுவினர் எங்கெங்கு செல்கிறார்கள்? என்ற விவரங்கள் அவர்களிடம் உள்ள ‘டேப்’ பில்(கையடக்க கணினி) பதிவிடப்பட்டிருக்கும். அந்த இடத்துக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து புகைப்படம் எடுத்து டெல்லிக்கு அனுப்பிய பின்னர் தான் ஆய்வுக்குழுவினர் அடுத்து எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற விவரம் ‘டேப்’பில் தெரியவரும். ஆய்வுக்குழுவினருடன் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் செல்ல மாட்டார்கள்.

ஆய்வுக்குழுவினர் இன்று ஒருநாள் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் நாளை(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளைமறுநாள் களஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் கோவை மாநகராட்சியின் செயல்பாடுகள், மாநகராட்சி சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலியின் பயன்பாடு உள்பட தேர்வுக்குரிய சில விவரங்களை பதிவு செய்து கொள்வார்கள். டெல்லி குழுவினர் கோவையில் ஆய்வு செய்ய இருப்பதையொட்டி கோவையின் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், கோவையின் பல்வேறு பகுதிகளில் 500 கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். இதனால் பட்டி யலில் கோவைக்கு தகுதியான இடம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story