தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 1 March 2018 2:30 AM IST (Updated: 1 March 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தென்காசி,

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காசி விசுவநாத சுவாமி

தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த 20-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

விழாவையொட்டி தினமும் காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, இரவில் மண்டகப்படி தீபாராதனை, சுவாமி-அம்பாள் வீதி உலா ஆகியவை நடந்து வருகிறது. மாலையில் சமய சொற்பொழிவு, இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

தேரோட்டம்

திருவிழாவின் 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. 9.20 மணிக்கு மேளதாளம் மற்றும் அதிர் வேட்டுகள் ஒலிக்க சுவாமி தேர், நிலையத்தில் இருந்து புறப்பட்டது. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேரின் முன்பு சிவ பக்தர்கள் வேத பாராயணம் படித்து சென்றனர். பக்தி கோஷங்களை பக்தர்கள் முழங்கிட தேர் தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக வந்து 10.25 மணிக்கு நிலையத்தை அடைந்தது. அதன்பிறகு 10.45 மணிக்கு உலகம்மன் தேர் புறப்பட்டது. இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 11.30 மணிக்கு நிலையத்தை அடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சங்கர், அய்யப்ப சேவா சங்க அமைப்பு செயலாளர் மாரிமுத்து, ரோட்டரி சங்க நிர்வாகி முருகன் ராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று புஷ்பாஞ்சலி


10-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு அபிஷேக தீபாராதனை, மாலை 6 மணிக்கு நாதஸ்வர இசை நிகழ்ச்சி, 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு பக்தி இசை நிகழ்ச்சி மற்றும் கிராமிய பாடல்கள், 8.30 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, பின்னர் சுவாமி - அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் சாத்தையா, கோவில் நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story