கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்


கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 1 March 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

கங்கை கொண்ட சோழ புரம் பிரகதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்து கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் சமேத பிரகன்நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மாக திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு சுவாமிகள் திருஉலா காட்சி நடைபெற்றது. பின்னர் பல்வேறு வாகனங்களில் பிரகதீஸ்வரர் சமேத பிரகன்நாயகி அம்மன் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் திருவீதி உலா நடைபெற்றது. அதை தொடர்ந்து 26-ந்தேதி சுவாமிகளின் திருக்கல் யாணம் நடைபெற்றது.

தேரோட்டம்

அதை தொடர்ந்து நேற்று காலை சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பிரகதீஸ்வரர் சமேத பிரகன்நாயகி அம்மன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து நாதஸ்வர இசை, மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன், சிவாய நம... என்ற பக்தி கோஷத்துடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது சிவனடியார்கள் தேவார, திருமுறைகளை பாடினர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஆன்மிக சான்றோர்கள் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதில் அரியலூர், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் பொதுமக்கள் செய்தனர். 

Next Story