காமராஜர், அம்பேத்கர், ஜெயலலிதா சிலைகள் அகற்றம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி


காமராஜர், அம்பேத்கர், ஜெயலலிதா சிலைகள் அகற்றம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி
x
தினத்தந்தி 1 March 2018 4:30 AM IST (Updated: 1 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு, செங்கம், ஆரணியில் காமராஜர், அம்பேத்கர், ஜெயலலிதா சிலைகள் அகற்றப்பட்டன. செங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில் 4 வழிச்சாலையில் உள்ள காமராஜர் சிலை புதுப்பிக்கும் பணி நடந்தது. இதனையடுத்து வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி நள்ளிரவில் சிலர் சிலையை திறந்து மாலை அணிவித்தனர். மறுநாள் காலையில் பார்த்த காங்கிரசார் அதிர்ச்சி அடைந்து, மீண்டும் சிலையை மூடினர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் பொதுப்பணித்துறை பொறியாளர் அருள்நாதன், போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ராஜ், தாசில்தார் அரிதாஸ் மற்றும் போலீசார் அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதாக கூறி காமராஜர் சிலையை அகற்றினர். அகற்றப்பட்ட சிலையை ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கும் வரை சிலை அலுவலகத்தில் தான் இருக்கும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் சிலையை அகற்றியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார், பீடம் இருந்த இடத்தில் காங்கிரஸ் கட்சி கொடியை அருகில் நட்டுக் கொள்ளுங்கள். சிலை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த பின்னர் திறக்கலாம் என்றனர். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அந்த பகுதியில் கொடிக்கம்பம் நட்டனர்.

செங்கத்தை அடுத்த தோக்கவாடி கிராமத்தில் கடந்த வாரம் அனுமதியின்றி அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, செங்கம் தாசில்தார் உதயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் சிலையை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் கர்ணன், பூபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அதில் சமரசம் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து பொதுமக்கள், சிலையை அகற்ற கொண்டுவரப்பட்ட கிரேனை முற்றுகையிட்டனர். அப்போது அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து செல்லும் வாகனங்கள் திருவள்ளுவர் நகர் வழியாகவும், கிருஷ்ணகிரியில் இருந்து வரும் வாகனங்கள் புதுப்பாளையம் வழியாகவும் மாற்றிவிடப்பட்டது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் முக்கிய பிரமுகர்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சிலையை அகற்றி செங்கம் பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தோக்கவாடி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே சிமெண்ட்டால் ஆன எம்.ஜி.ஆர். சிலை இருந்தது. இதனையடுத்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மேற்பார்வையில், எம்.ஜி.ஆர். முழு உருவ வெண்கல சிலை அமைக்கவும், அதன் அருகில் முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பேரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்ட்டால் ஆன எம்.ஜி.ஆர். சிலையை அகற்றிவிட்டு, வெண்கலத்தால் ஆன புதிய சிலையை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்த நாளன்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ சிலைகள் இரவோடு இரவாக திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரணி தாசில்தார் ஆ.சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் முனியாண்டி, புருஷோத்தமன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன், அலுவலக மேலாளர் நெடுமாறன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் அலுவலர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வெண்கல சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், கோவிந்தராசன், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத் உள்பட நிர்வாகிகள் சிலைகளை அகற்றவிடாமல் தடுத்தனர்.

அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை அகற்றி நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். எம்.ஜி.ஆர். சிலை ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அமைக்கப்பட்டதால் அந்த சிலை அகற்றப்படவில்லை.

இதனையடுத்து ஆரணி நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 104 பேரை கைது செய்து, அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தலைவர்களின் சிலை அகற்றப்பட்டதால் அந்தந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story