மாட்டு வண்டி மீது பஸ் மோதல்: அண்ணன்-தம்பி படுகாயம் மாடு பரிதாப சாவு


மாட்டு வண்டி மீது பஸ் மோதல்: அண்ணன்-தம்பி படுகாயம் மாடு பரிதாப சாவு
x
தினத்தந்தி 1 March 2018 3:45 AM IST (Updated: 1 March 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

வேட்டவலத்தில் மாட்டு வண்டி மீது அரசு பஸ் மோதியதில் அண்ணன் - தம்பி காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் மாடு செத்தது.

வேட்டவலம்,

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்த வி.புதுப்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). இவரும், அவரது தம்பி தனசேகரனும் நெல் மூட்டைகளை ஒற்றை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வேட்டவலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்றனர்.

வேட்டவலம் குபேர நகர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென மாட்டு வண்டி மீது மோதியது. இதில் அண்ணன் - தம்பி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் வண்டி மாடும் பரிதாபமாக செத்தது. சாலையில் நெல் மூட்டைகள் சிதறிக்கிடந்தது. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் வேட்டவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தையன், வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் மாட்டின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story