தனியார் பஸ் மோதி காட்டெருமை சாவு சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்


தனியார் பஸ் மோதி காட்டெருமை சாவு சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 1 March 2018 4:15 AM IST (Updated: 1 March 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற போது தனியார் பஸ் மோதியதில் காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

துவரங்குறிச்சி,

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே பெரியமலை மற்றும் நல்லூர் மலை பகுதிகளில் காட்டெருமைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. மலைபகுதியில் வறட்சி ஏற்பட்டால் வனவிலங்குகள் மலையை விட்டு வெளியேறி சாலையை கடந்து கிராமங்கள், தோட்டங்களை நோக்கி செல்வது வாடிக்கையாகி விட்டது. துவரங்குறிச்சி வனத்துறை அலுவலகம் அருகே உள்ள பெரியமலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டெருமைகள் மற்றும் மான்கள் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ் சாலையை கடக்க முற்படும் போது அவை வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று காலை 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று துவரங் குறிச்சி வனத்துறை அலுவலகத்தில் இருந்து சற்று தொலைவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது சென்னையில் இருந்து மதுரை நேக்கிச் சென்ற தனியார் பஸ் காட்டெருமை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காட்டெருமை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

புதைத்தனர்

பின்னர் டிரைவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்தி விட்டார். காட்டெருமை பலியானது குறித்து அந்த பகுதி மக்கள் துவரங்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துவரங்குறிச்சி வனச்சரக அலுவலர் (பொறுப்பு) மாதேஷ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் சாலையில் கிடந்த காட்டெருமையை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர் கால்நடை மருத்துவர் மற்றும் பணியாளர்கள வந்து இறந்த காட்டெருமையை பிரேத பரி சோதனை செய்த பின்னர் சாலையோரம் உள்ள வனப் பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.


Next Story