கடலூர் கூத்தப்பாக்கத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கடலூர் கூத்தப்பாக்கத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கூத்தப்பாக்கத்தில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் கூத்தப்பாக்கம் பாரதியார்நகர் கிளை மற்றும் பொது மக்கள் சார்பில் பொன்விளைந்த கழுத்தூர் மாரியம்மன் கோவில் அருகில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை நிர்வாகி முருகன் தலைமை தாங்கினார். மகேஷ், துணை செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் அய்யனார், இளையராஜா, சின்னமணி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில நிர்வாககுழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட துணை செயலாளர் குளோப், வட்ட செயலாளர் தமிழ்மணி, நகர செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். இதில் பாரதியார்நகர், வெங்கடேசநகர், சுந்தர்நகர் மற்றும் வைத்தியலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர். முடிவில் துரைராஜ் நன்றி கூறினார்.

பின்னர் இது குறித்து பாரதியார்நகர், வெங்கடேசநகர், சுந்தர்நகர் மற்றும் வைத்தியலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது கூத்தப்பாக்கம் பொன்விளைந்த கழுத்தூர் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. ஆனால் நீர்தேக்க தொட்டி கடந்த 12 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கிறது. நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்படவில்லை. தற்காலிகமாக ஆழ்துளை கிணறு அமைத்து தினமும் 45 நிமிடங்கள் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த தண்ணீர் எங்களுக்கு போதுமானதாக இல்லை. மின்சாரம் தடை ஏற்பட்டால் அந்த தண்ணீரும் கிடைக்காது. இதனால் நாங்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்படுகிறோம். பலமுறை முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே எங்களின் மனவேதனையை உணர்ந்து குடிநீர் வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story