பாந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் தற்கொலைகளை தடுக்க கடலுக்கடியில் கண்காணிப்பு கேமரா


பாந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் தற்கொலைகளை தடுக்க கடலுக்கடியில் கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 1 March 2018 4:02 AM IST (Updated: 1 March 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

பாந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் தற்கொலைகளை தடுக்க கடலுக்கு அடியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

பாந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் தற்கொலைகளை தடுக்க கடலுக்கு அடியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தொடரும் தற்கொலைகள்

மும்பையில் பாந்திரா, ஒர்லி பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கடல்வழி மேம்பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதேபோல வேறு குற்ற சம்பவங்களும் நடக்கின்றன.

இந்த நிலையில் சமூக ஆர்வலரான கேதான் திரோதர் மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில், “ வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு பாந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலம் விருப்பமான இடமாக மாறிவிட்டது. மேம்பாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மோசமான பாதுகாப்பு வசதி தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம். இவ்வாறு தற்கொலை செய்பவர்களின் உயிரிழப்புளை தடுக்க கடலுக்கு அடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் ” என்று கூறினார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கவாய் மற்றும் பாரதி தாங்ரே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசிடம் கருத்து

அப்போது மனு குறித்து விளக்கம் அளித்த அரசு தரப்பு வக்கீல், “ இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பாலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் 86 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டும் இல்லாமல் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது ” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்கொலைகளை தடுக்க பாந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலத்தின் அருகே கடலுக்கு அடியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து மத்திய அரசும் கடலோர காவல்படையினரும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Next Story