காய்கறி, பழங்களில் அதிக பூச்சிக்கொல்லி மருந்து: மராட்டிய அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு சம்மன்


காய்கறி, பழங்களில் அதிக பூச்சிக்கொல்லி மருந்து: மராட்டிய அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு சம்மன்
x
தினத்தந்தி 1 March 2018 4:24 AM IST (Updated: 1 March 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி, பழங்களில் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறு ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பை,

காய்கறி, பழங்களில் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறு ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

பொதுநலன் மனு


மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் விவசாயிகள் நல்ல மகசூலுக்காக அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இவை சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களை சென்றடைகின்றன. மேலும் பாலில் கலப்படம் மேற்கொள்ளப்படுகிறது. மும்பையில் பல்வேறு துரித உணவகங்களில் தடை செய்யப்பட்ட ஹார்மோன் வளர்ச்சி மருந்து செலுத்தப்பட்ட கோழிக்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றால் பொதுமக்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தடை செய்ய ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சம்மன்

இந்த மனு நீதிபதிகள் நரேஷ் பாட்டீல், குல்கர்னி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “மத்திய அரசு ஏற்கனவே பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது, உணவு பதனிடுதல் மற்றும் இதர ரசாயன பொருட்களை உணவில் பயன்படுத்துவது குறித்து ஒரு தர கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதனை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு அதிகாரிகள் உள்ளனர். எனவே மராட்டிய அரசின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு மற்றும் வினியோகத்துறை உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் வருகிற புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story