தவிக்கும் தத்தெடுத்த கிராமங்கள்


தவிக்கும் தத்தெடுத்த கிராமங்கள்
x
தினத்தந்தி 1 March 2018 11:34 AM IST (Updated: 1 March 2018 11:34 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியின் கிராமப்புற வளர்ச்சி என்ற நோக்கத்தை வலுப்படுத்தும் விதமாக கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி ‘சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சுகாதாரம், சுத்தம், பசுமை பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை வசதிகளை கொண்ட மாதிரி கிராமங்களை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின்படி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

அதன்படி, எம்.பி.க்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து உள்ளனர். அடையாளம் காணப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களின் முழு வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய செயல்முறைகளை முடுக்கிவிடுதல், வளமான சமூக மூலதனம் உள்ளிட்ட பல்வேறு செயல்களை கொண்ட இந்த திட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ஆனால் அந்த திட்டம் தனது இலக்கை அடைந்ததா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், இன்று வரை தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி என எதுவும் முன்னேற்றம் கண்டதாக இல்லை. தத்தெடுக்கப்பட்ட பல கிராமங்கள் முதலில் எந்த நிலையில் இருந்ததோ, அப்படியே இன்றைக்கும் காட்சி அளிக்கின்றன. அந்த கிராமங்கள் அனைத்தும் தவித்துக்கொண்டு இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.

தத்தெடுக்கப்பட்ட கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி, தரமான மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும். குறிப்பாக, சாலை, குடிநீர் வசதி மேம்படுத்தப்பட வேண்டும். சுகாதார வசதிகளில் முன்னேற்றம் காண வேண்டியதும் அவசியம். அங்கு வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும். சுயதொழில் தொடங்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

தற்போது, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் கமல், அதன் ஆரம்ப விழாவில் 8 கிராமங்களை தத்தெடுக்கப்போவதாக தெரிவித்தார். இது வரவேற்கத்தக்கது. இதே போல, தமிழகத்தில் உள்ள பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என பொருளாதாரத்தில் உச்சத்தில் இருப்பவர்களும் கிராமங்களை தத்தெடுத்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவலாம். இவர்களுக்கு தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முன்னதாக எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் அனைத்து வசதிகளும் கொண்ட முன்மாதிரி கிராமங்களாக மிளிர நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.

-மகேஷ்

Next Story