போலீஸ் ஏட்டு மீது சரமாரி தாக்குதல் தப்பி ஓடிய 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


போலீஸ் ஏட்டு மீது சரமாரி தாக்குதல் தப்பி ஓடிய 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 March 2018 3:45 AM IST (Updated: 1 March 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் போலீஸ் ஏட்டு சரமாரி தாக்கப்பட்டார். தப்பி ஓடிய 3 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

குழித்துறை,

களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வில்சன். அவர் நேற்று காலை வழக்கம் போல் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். மார்த்தாண்டத்தில் மேம்பால பணி நடப்பதால் சாலை அடைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏட்டு வில்சன் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் 3 வாலிபர்கள் இடையூறாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தனர். இதனை கண்டித்த அவர், மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு கூறினார். இதுதொடர்பாக போலீஸ் ஏட்டு வில்சனுக்கும், 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஒரு வாலிபர், மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்து வில்சனின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், வாலிபர்களை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். செல்லும் போது ஒருவரின் செல்போனும் கீழே விழுந்து விட்டது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சப்–இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த ஏட்டு வில்சனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் அந்த வாலிபர்கள் விட்டு சென்ற செல்போன் மூலம் விசாரித்த போது, போலீஸ் ஏட்டை தாக்கியது பாறவிளை, திருவட்டார் பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் என தெரியவந்தது. மேலும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தப்பி ஓடிய 3 பேரையும்  போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story