திருமானூரில் ஜல்லிக்கட்டு; 7 பேர் காயம்


திருமானூரில் ஜல்லிக்கட்டு; 7 பேர் காயம்
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருமானூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 7 பேர் காயமடைந்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் ஆண்டுதோறும் கைலாசநாதர் கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து திருவெங்கனூரிலிருந்து சீர்வரிசை பொருட்கள் காமாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி ஊரின் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 400-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் திருமானூரை சேர்ந்த ராஜா (வயது 28), ஒரத்தநாட்டை சேர்ந்த தியாகராஜன் (28), திருவெங்கனூரை சேர்ந்த அருள் (22), கீழகொளத்தூரை சேர்ந்த ரத்தினம் (70), திருச்சியை சேர்ந்த கார்த்திக் (19) உள்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த ரத்தினம் மட்டும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், கட்டில், நாற்காலிகள், வேட்டி-சேலை போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக் கட்டு போட்டியை திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் திருமானூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story