ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டது சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா


ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டது சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 2 March 2018 4:00 AM IST (Updated: 2 March 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மலை மீது பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வரர் சாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, ஓசூர் தேர்பேட்டையில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன், ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா, ஓசூர் நகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத்,் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில், மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர சாமியை வைத்து, பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என விண்ணை முட்டும் பக்தி கோஷங்களுடன் தேரை இழுத்து சென்றனர். முன்னதாக, விநாயகர் சிறிய தேர், அதனை தொடர்ந்து சந்திர சூடேஸ்வர சாமியின் பெரிய தேர் மற்றும் மரகதாம்பிகை தேர் இழுத்து செல்லப்பட்டது.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கடந்த 22-ந் தேதி நிகழ்ச்சிகள் தொடங்கியது. 23-ந் தேதி சிம்ம வாகன உற்சவம், 24-ந் தேதி மயில் வாகன உற்சவம், 25-ந் தேதி நந்தி வாகன உற்சவம் மற்றும் 26-ந் தேதி நாக வாகன உற்சவம், 27-ந் தேதி ரிஷப வாகன உற்சவமும், நேற்று (புதன்கிழமை) காலை பிராம்ஹண சந்தர்ப்பணை மற்றும் நண்பகலில் ருத்ராபிஷேகமும் நடைபெற்றது. இதில், கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி தலைவரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர்் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு சாமிக்கு புஷ்ப அலங்காரம், புஷ்ப சாற்றுப்படி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் சாமி உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தலைமை குருக்கள் வாச்சீஸ்வர குருக்கள் நடத்தி வைத்தார்.

தேர்த்திருவிழாவையொட்டி, ஓசூர் தேர்பேட்டையில் பி.எம்.சி. பெருமாள் மணிமேகலை கல்லூரி, வீரசைவ லிங்காயத்து நல சங்கம், யாதவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, யாதவ பண்பாட்டு கழகம் ஆகியவற்றின் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கினார்கள். தாலுகா அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, தேர்பேட்டையில் நேற்று இரவு இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு வாணவேடிக்கைகளுடன் ராவண வாகன உற்சவம் மற்றும் பல்லக்கு உற்சவமும், நாளை (சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறும். தொடர்ந்து, 4-ந் தேதி மற்றும் 5-ந் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவம், 6-ந் தேதி பல்லக்கு உற்சவம், 7-ந் தேதி பிரகார உற்சவம் மற்றும் 8-ந் தேதி சயனோற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம், உதவி ஆணையர் நித்யா, மற்றும் கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி தலைவர் கே.ஏ. மனோகரன் மற்றும் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர். ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரமே, விழாக்கோலம் பூண்டிருந்தது.

நேற்றைய தேர்த்திருவிழாவில், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ராஜி, மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் பாலசந்திரன், தொழில் அதிபர்கள் ஆனந்தய்யா, முத்துகிருஷ்ணன், ஏ.வி.எஸ்.சந்திரய்யா, ஆர்.பாபு, ஓசூர் பூ வியாபாரிகள் சங்க தலைவர் திம்மராஜ், செயலாளர் மூர்த்தி ரெட்டி, கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயதேவன், நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் நாகராஜ், சங்கர், சீனிவாசன், வாசுதேவன், நந்தகுமார், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஜி.சூர்யா கணேஷ், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் முனிராஜ், யுவசேனா மாநில தலைவர் முரளிமோகன், யாதவ பண்பாட்டு கழக துணைத்தலைவர் மோகன்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வரதராஜ், ஸ்ரீகல்யாண சூடேஸ்வரர் கமிட்டி துணைத்தலைவர் அசோக்குமார், ஜவுளிக்கடை அதிபர் செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலமான கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story