பண்ருட்டி அருகே மது குடித்து விட்டு கணவர் தகராறு செய்ததால் 4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி


பண்ருட்டி அருகே மது குடித்து விட்டு கணவர் தகராறு செய்ததால் 4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

மது குடித்து விட்டு கணவர் தகராறு செய்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து 4 குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டுகூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி(28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு நிதிஷ் குமார்(8), நிஷாந்த்(7) ஆகிய 2 மகன்களும், இரட்டை பெண் குழந்தைகளான ஸ்ரீமதி(3), ஸ்ரீநிதி(3) ஆகியோரும் உள்ளனர்.

அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிதிஷ்குமார் 4-ம் வகுப்பும், நிஷாந்த் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஸ்ரீமதியும், ஸ்ரீநிதியும் அங்கன்வாடி மையத்துக்கு சென்று வந்தனர்.

கனகராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து, தனது மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

மேலும் கனகராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். வேலைக்கு சென்றாலும், அந்த பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மது குடித்து விடுவாராம். இதனால் செல்வராணி, கூலிவேலைக்கு சென்று 4 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கனகராஜ் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர், செல்வராணியிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே செல்வராணி, 4 குழந்தைகளை வளர்க்கவே கஷ்டப்படுகிறோம். இந்த சூழ்நிலையில் மது குடிப்பது நியாயமா? என்று கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி செல்வராணியை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்த அவர்களின் குழந்தைகள் கனகராஜை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் கனகராஜ் தாக்கினார்.

இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தைகளும், அவரது மனைவியும் அழுதனர். பின்னர் சிறிது நேரத்தில் கனகராஜ் படுத்து தூங்கி விட்டார். கணவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வராணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

குடிகார கணவரிடம் தனது குழந்தைகளைவிட்டு செல்ல மனமில்லாத செல்வராணி, குளிர்பானத்தில் விஷம் கலந்து 4 குழந்தைகளுக்கும் கொடுத்தார். குளிர்பானம் என்று நினைத்து குடித்த 4 பேரும், அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். பின்னர் அவரும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதற்கிடையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒருவர் செல்வராணியின் வீட்டிற்கு சென்றார். அப்போது செல்வராணி, அவரது குழந்தைகளும் வாயில் நுரைதள்ளிய நிலையில் உயிருக்குபோராடிக் கொண்டிருந்தனர்.

இதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக 5 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கனகராஜ் மற்றும் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி னர். விசாரணையில், கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் செல்வராணி தனது 4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story