சேர்வைகாரனூரில் விவசாயி வெட்டிக்கொலை


சேர்வைகாரனூரில் விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

சேர்வைகாரனூரில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தரகம்பட்டி,

தரகம்பட்டியை அடுத்த ஆதனூர் ஊராட்சி சேர்வைகாரனூரை சேர்ந்தவர் மருதை(வயது 75). விவசாயியான இவருக்கு காளியம்மாள்(60), மகாலட்சுமி(40) என இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் காளியம்மாள் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மருதையும், மகாலட்சுமியும் சேர்வைகாரனூரில் வசித்து வருகின்றனர். மருதை அதே பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவர் தினசரி வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவில் தோட்டத்திற்கு சென்று தங்குவது வழக்கம். மருதைக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை 2-வது மனைவி மகாலட்சுமிக்கு எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மருதை தோட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று மகாலட்சுமி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது தனது கணவர் தலையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கும், சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த சிந்தாமணிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ‘ஜெசி’ வரவழைக்கப் பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு அங்கிருந்து சென்று ஊருக்குள் உள்ள அவரது வீட்டிற்கே சென்று நின்றது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். கொலையாளியை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன் மேற்பார்வையில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story