கணவனை கரண்டியால் அடித்து கொன்று விட்டு மனைவியும் தற்கொலை


கணவனை கரண்டியால் அடித்து கொன்று விட்டு மனைவியும் தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2018 3:45 AM IST (Updated: 2 March 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே கணவனை கரண்டியால் அடித்து கொன்று விட்டு மனைவியும் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையத்தை அடுத்த சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 50). இவருடைய மனைவி மைதிலி (30). இவர்களுக்கு கார்த்தி (10) என்ற மகனும், வைஷ்ணவி (8) என்ற மகளும் உள்ளனர். சுப்பிரமணியத்துக்கு காஞ்சிக்கோவில் அருகே உள்ள திருநீலபுரத்தில் அரிசி ஆலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆலை சரியாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக கடன் அதிகமாகி சுப்பிரமணியம் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியதாக தெரிகிறது.

மேலும் இதுதொடர்பாக அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது மைதிலி ஆத்திரம் அடைந்து தன் கையில் இருந்த கரண்டியால் சுப்பிரமணியத்தின் நெற்றியில் ஓங்கி அடித்து உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியம் சுருண்டு விழுந்து செத்தார்.

இதனைப்பார்த்ததும் அய்யய்யோ தான் அடித்ததில் கணவன் இறந்துவிட்டாரே எனக்கூறியபடி மைதிலி கதறி அழுது துடித்தார். உடனே அவரும் விஷம் குடித்துவிட்டார். இதில் மைதிலியும் சிறிது நேரத்தில் இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவனை கொன்றுவிட்டு மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story