பட்டாபிராம் அருகே கார் திருடிய 2 வாலிபர்கள் கைது


பட்டாபிராம் அருகே கார் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 2 March 2018 4:15 AM IST (Updated: 2 March 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

பட்டாபிராம் அருகே கார் திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி,

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது காரை டிரைவர் அருள் செல்வமணி ஓட்டி வந்தார்.

அருள் செல்வமணி நேற்று முன்தினம் இரவு பட்டாபிராமுக்கு சவாரி ஏற்றி வந்தார். இரவு நேரமாகிவிட்டதால் காரை பட்டாபிராமை அடுத்த நெமிலிச்சேரி மேம்பாலத்தின் கீழே விட்டு விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நேற்று காலை காரை எடுக்க அருள் செல்வமணி வந்தார். அப்போது காரை காணாததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அறிந்த கார் உரிமையாளர் ஜெயச்சந்திரன், பட்டாபிராம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனிடையே பட்டாபிராம் சஞ்சீவி நகரை சேர்ந்த பழ வியாபாரி லட்சுமணன் நேற்று காலை பட்டாபிராம் கோபாலபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர், அவரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.1,500-ஐ பறித்துக்கொண்டு சென்றனர். இவரும் பட்டாபிராம் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் கோட்டீஸ்வரன் மற்றும் போலீசார் பட்டாபிராம் தண்டுரை பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களை பட்டாபிராம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 29), தினேஷ்குமார் (19) என்பது தெரியவந்தது. மேலும் காரை கடத்தியதும், லட்சுமணனிடம் வழிப்பறி செய்ததும் அவர்கள் தான் என தெரிந்தது.

பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கார், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story