புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 276 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 276 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள்
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 பொது தேர்வில் தமிழ் முதல் தாளை 21 ஆயிரத்து 276 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 162 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவரவில்லை.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 89 மேல்நிலை பள்ளிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 78 மேல்நிலை பள்ளிகளும் என மொத்தம் 167 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 2 கல்வி மாவட்டங்களையும் சேர்த்து 9 ஆயிரத்து 829 மாணவர்கள், 11 ஆயிரத்து 609 மாணவிகள் என 21 ஆயிரத்து 438 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிரகதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு முன்மாதிரி மேல் நிலைப்பள்ளி,அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 42 தேர்வு மையங்களிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 34 தேர்வு மையங்களிலும் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தமிழ் முதல் தாள் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 276 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.இதில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 87 மாணவ, மாணவிகளும், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் என மொத்தம் 162 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவரவில்லை. இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெற உள்ளது

பிளஸ்-2 தேர்வினை முன்னிட்டு தேர்வு நடைபெறும் அனைத்து பள்ளிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரசு போக்கு வரத்து கழகத்தின் சார்பில் பள்ளிகளுக்கு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. மாணவ, மாணவிகள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தன. மேலும் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் உள்ளிட்டவற்றை கொண்டுவருவதற்கும், தேர்வு முடிந்ததும் விடைத்தாளை கொண்டு செல்லவும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், ஒவ்வொரு தேர்வு மைய நுழைவு வாயிலிலும் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

Next Story