கடற்கரையில் நடந்த தீர்த்தவாரிக்கு சென்ற வாலிபர் கடலில் மூழ்கி சாவு


கடற்கரையில் நடந்த தீர்த்தவாரிக்கு சென்ற வாலிபர் கடலில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 2 March 2018 4:15 AM IST (Updated: 2 March 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

தீர்த்தவாரி விழாவுக்காக சென்ற வாலிபர் கடலில் இறங்கி குளித்தபோது, ராட்சத அலை இழுத்துச் சென்றதில் மூச்சுத்திணறி பரிதாபமாகச் செத்தார்.

பாகூர்,

புதுவை வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன் (வயது 45) மீனவர். இவருடைய மகன் இசைவேந்தன் (19) டிப்ளமோ படித்து முடிந்து வேலை தேடிவந்தார். நேற்று தனது நண்பர்களான காட்டுக்குப்பத்தை சேர்ந்த கோபிநாத் (19), தேங்காய்த்திட்டை சேர்ந்த மவுனிஷ்வர் (19) ஆகியோருடன் நேற்று வீராம்பட்டினம் கடற்கரையில் நடைபெற்று மாசிமக தீர்த்த வாரிக்கு சென்றார்.

அங்கு அவர்கள் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு புதுக்குப்பம் கடற்கரைக்கு நடந்தே சென்றனர். அங்கு அவர்கள் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். சிறிது நேரத்தில் கோபிநாத், மவுனிஷ்வர் ஆகியோர் கடற்கரைக்கு திரும்பி மணலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். இசைவேந்தன் மட்டும் தனியாக குளித்துக்கொண்டு இருந்தார்.

ராட்சத அலை இழுத்துச் சென்றது

நேற்று பவுர்ணமியையொட்டி கடலில் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்தன. இந்த அலையில் இசைவேந்தன் சிக்கினார். அவரை அலை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதில் அவர் கடலில் மூழ்கி மூச்சுத்திணறினார். உடனே அவர் உதவி கேட்டு அலறினார். சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் இசைவேந்தனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக புதுவை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து இசைவேந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story