பிளஸ்–2 தேர்வு தொடக்கம்: தமிழ் முதல்தாளை 26,074 மாணவ, மாணவிகள் எழுதினர்


பிளஸ்–2 தேர்வு தொடக்கம்: தமிழ் முதல்தாளை 26,074 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2018 4:15 AM IST (Updated: 2 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியது. இதில் தமிழ் முதல்தாள் தேர்வை 26 ஆயிரத்து 74 மாணவ, மாணவிகள் எழுதினர். 210 பேர் தேர்வுக்கு வரவில்லை.

நாமக்கல்,


தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 202 பள்ளிகளில் இருந்து மொத்தம் 13 ஆயிரத்து 103 மாணவர்கள், 13 ஆயிரத்து 401 மாணவிகள் என 26 ஆயிரத்து 504 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுடன் சேர்த்து தனித்தேர்வர்கள் 753 பேர் என மொத்தமாக மாவட்டம் முழுவதும் 27 ஆயிரத்து 257 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 85 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

முதல்நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வை எழுத 25 ஆயிரத்து 776 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 25 ஆயிரத்து 622 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 154 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்களை பொறுத்த வரையில் தமிழ் முதல் தாள் தேர்வை 354 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 298 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 56 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மொத்தமாக தமிழ் முதல்தாள் தேர்வை 26 ஆயிரத்து 74 பேர் எழுதினர். இதேபோல் 154 மாணவ, மாணவிகள், 56 தனித்தேர்வர்கள் என 210 பேர் எழுதவில்லை. இதேபோல் இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பிரெஞ்சு போன்ற மொழி தேர்வுகளை 728 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று தேர்வு எழுதினர்.


பிளஸ்–2 தேர்வு கண்காணிப்பு பணியில் 83 முதன்மை கண்காணிப்பாளர்கள், 1,500 அறை கண்காணிப்பாளர்கள், 83 துறை அலுவலர்கள், 300 பேர் கொண்ட பறக்கும் படை, வழித்தட அலுவலர்கள் என மொத்தம் சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபட்டனர்.

வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேர்வை முன்னிட்டு அனைத்து மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பிளஸ்–2 தேர்வு தொடங்கியதை முன்னிட்டு நேற்று காலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், பலப்பட்டரை மாரியம்மன் கோவில் என அனைத்து கோவில்களிலும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்வதை காண முடிந்தது. இதுதவிர அனைத்து மையங்களிலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். தேர்வை முன்னிட்டு நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.


Next Story