குழந்தைகள் கடத்தலை தடுக்க உதயம் தன்னார்வ இயக்கம்


குழந்தைகள் கடத்தலை தடுக்க உதயம் தன்னார்வ இயக்கம்
x
தினத்தந்தி 2 March 2018 4:15 AM IST (Updated: 2 March 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை ரெயில் நிலையத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க உதயம் தன்னார்வ இயக்கத்தை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.இந்த இயக்கத்தினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கோவை,

ரெயில் நிலையங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க, ரெயில்வே போலீஸ் சார்பில் ‘உதயம்’ என்ற தன்னார்வ இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கத்தில் ஆட்டோ, கால் டாக்சி டிரைவர்கள், ரெயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், கடைகளில் உள்ள விற்பனையாளர்கள், பாரம் தூக்கும் தொழிலாளர்கள் உள்பட பலர் உள்ளனர்.

கோவை ரெயில் நிலையத்தில் இந்த இயக்கம் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கோவை ரெயில் நிலைய இயக்குனர் டி.சதீஷ், மேலாளர் சின்ராசு, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வரவேற்றார்.

விழாவில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் கலந்து கொண்டு உதயம் தன்னார்வ இயக்கத்தை தொடங்கி வைத்ததுடன், இதில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகிலேயே குழந்தைகள் அதிகமாக உள்ள நாடு இந்தியாதான். இங்கு 45 சதவீதம் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தரமான கல்வி மற்றும் பாதுகாப்பு அளிப்பது முக்கியம். அப்படி கொடுத்தால்தான் அவர்கள் வளர்ந்து, நல்ல வேலையில் இருந்தால் நமது நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது.

நமது நாட்டில் உள்ள குழந்தைகளில் 50 சதவீதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியடைய செய்கிறது. சில குழந்தைகளுக்கு அவர்கள் வசிக்கும் வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவ்வாறு வெளியேறும் குழந்தைகள் முதலில் செல்வது ரெயில் நிலையமும், பஸ்நிலையமும் தான்.

அங்கு இருக்கும்போது சமூக விரோதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டால் அவர்களின் வாழ்க்கையே திசைமாறி போய்விடும். அதை தடுக்கவே இந்த உதயம் தன்னார்வ இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சந்தேகப்படும்படியாக நிற்கும் குழந்தைகள், அவர்களை அழைத்துச்செல்பவர்களை பிடித்து விசாரிப்பதுடன், போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5,200 குழந்தைகளை போலீசார் மீட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 2,260 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். அதில் 226 பேர் பெண் குழந்தைகள் ஆவார்கள். இது போலீசார் பார்த்து மீட்டது ஆகும். போலீசாருக்கு தெரியாமல் எத்தனைபேர் கடத்தப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவில்லை. எனவே இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள அனைவரும் குழந்தைகள் கடத்தலை தடுக்க முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும்.

விழாவில் உதயம் தன்னார்வ இயக்கத்தில் சேர்ந்துள்ள உறுப்பினர்கள், ரெயில் நிலைய அதிகாரிகள், ரெயில்வே போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிந்த பின்னர் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் தொடங்கப்பட்டுள்ள உதயம் தன்னார்வ இயக்கத்தில் 266 பேர் உறுப்பினர்களாக சேர்ந்து இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த இயக்கம் தொடங்கப்படும். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதன் காரணமாக குழந்தைகள் கடத்தலுக்கு வாய்ப்பு ஏற்படாது.

மேலும் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளும், குழந்தைகள் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தாலோ, அவர்களை கடத்திச் செல்வதை பார்த்தாலோ உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். சென்னை ரெயில்வே சரகத்தில் 550 போலீசார் பணியில் உள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 200 போலீசாருக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஜூன் மாதத்தில் பணியில் சேர்ந்து விடுவதால் காலிப்பணியிடம் இருக்காது.

Next Story