கோவையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


கோவையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 March 2018 3:45 AM IST (Updated: 2 March 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. போலீசார் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்தனர். இதை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். புறநகர் வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், தெற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை செல்வன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘கார்த்தி சிதம்பரம் மீது மத்திய பா.ஜனதா அரசு பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் பெரும் முதலாளிகள் வங்கியில் கடன் வாங்கி விட்டு ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி முன்வரவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல் பா.ஜனதா அரசு பொய் வழக்குபோடுவதில் முனைப்பாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது’ என்று பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் வீனஸ் மணி, கே.எஸ்.மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், பி.எஸ்.சரவணக்குமார், எச்.எம்.எஸ்.ராஜாமணி, கவிதா, ஹரிகரன், விஜயகுமார், ராமசாமி, ஆர்.கே.ரவி, வக்கீல் கருப்பசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காங்கிரஸ் கொடியை ஏந்தி வந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story