காய்கறிகள் விலை தொடர் வீழ்ச்சி இன்னும் 2 வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்பு என வியாபாரிகள் தகவல்
விளைச்சல் அதிகமாக இருப்பதால் காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இன்னும் 2 வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் காய்கறிகள் விலை குறைந்தது. ஜனவரி மாதத்தின் இறுதியில் இருந்து தற்போது வரை தொடர் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டில் காய்கறிகள் விளைச்சல் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், கத்தரிக்காய் உள்பட சில காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விலை உச்சத்தில் இருந்த சாம்பார் வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.20 முதல் 25 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் நலச்சங்க துணைத்தலைவர் சுகுமார் கூறியதாவது:-
தொடர் வீழ்ச்சி
விளைச்சல் அதிகமாக இருப்பதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 550 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இது சாதாரண நாட்களை விட 70 முதல் 80 லாரிகள் அதிகம் ஆகும். விளைச்சல், வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை தொடர் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
இதில் தேங்காய், முருங்கைக்காய் விலை மட்டும் அதிகமாக இருக்கிறது. கும்பகோணம், தஞ்சாவூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது தஞ்சாவூரில் இருந்தும், மைசூருவில் இருந்தும் குறைவான அளவே தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதனால் அதன் விலை அதிகரித்து இருக்கிறது. இதேபோல், முருங்கைக்காய் வரத்தும் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது.
இன்னும் 2 வாரத்தில் காய்கறிகள் விலை கொஞ்சம் உயரத்தொடங்கும். ஏப்ரல், மே மாதங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும்.
விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை (ஒரு கிலோ) நிலவரம் வருமாறு:-
தக்காளி - ரூ.7 முதல் ரூ.8 வரை, கத்தரிக்காய் - ரூ.8 முதல் ரூ.10 வரை, பீன்ஸ் - ரூ.10 முதல் ரூ.20 வரை, அவரைக்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, கேரட் - ரூ.10 முதல் ரூ.20 வரை, பீட்ரூட் - ரூ.10, சவ்சவ் - ரூ.10 முதல் ரூ.15 வரை, நூக்கல் - ரூ.10, முள்ளங்கி - ரூ.10, முட்டைக்கோஸ் - ரூ.5 முதல் ரூ.7 வரை, வெண்டைக்காய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, புடலங்காய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, முருங்கைக்காய் - ரூ.30 முதல் ரூ.40 வரை, பல்லாரி - ரூ.15 முதல் ரூ.25 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.20 முதல் ரூ.25 வரை, மிளகாய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, பச்சை பட்டாணி - ரூ.20 முதல் ரூ.25 வரை, இஞ்சி - ரூ.20 முதல் ரூ.30 வரை, காலிபிளவர்(ஒன்று) - ரூ.5 முதல் ரூ.10 வரை, பீர்க்கங்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பாகற்காய் - ரூ.20, தேங்காய் - ரூ.30 முதல் ரூ.35 வரை, சுரைக்காய் - ரூ.5 முதல் ரூ.10 வரை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story