துமகூருவில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்கா முதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்


துமகூருவில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்கா முதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 March 2018 4:15 AM IST (Updated: 2 March 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்காவை நேற்று முதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்.

பெங்களூரு,

துமகூருவில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்காவை நேற்று முதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்.

சோலார் மின்உற்பத்தி பூங்கா

துமகூரு மாவட்டம் பாவகடாவில் உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த சோலார் மின் உற்பத்தி பூங்காவை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.

இதில், மந்திரிகள் டி.கே.சிவக்குமார், டி.பி.ஜெயச்சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

600 மெகாவாட் மின்சாரம்

உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்கா பாவகடாவில் அமைந்திருப்பதால் துமகூருவுக்கு பெருமை கிடைத்துள்ளது. நமது மாநிலத்தில் அமைந்திருப்பதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட்டு கொள்ளலாம். இந்த பூங்கா 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி செலவில் இந்த சோலார் பூங்கா அமைக்கப்பட்டு இருக்கிறது. சோலார் பூங்கா அமைக்க விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த சோலார் பூங்காவில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். முதற்கட்டமாக 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படுவது குறையும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தான் காங்கிரஸ் அரசின் நோக்கமாகும்.

கணக்கு கேட்க அமித்ஷா யார்?

மாநிலத்தில் வளர்ச்சி பணிகளுக்காக செலவு செய்த கணக்கு விவரங்களை கொடுக்கும்படி அமித்ஷா கேட்கிறார். நம்மிடம் கணக்கு கேட்க அமித்ஷா யார்?. அவர் நம்மிடம் கணக்கு கேட்க என்ன உரிமை இருக்கிறது. மாநில மக்கள் கணக்கு கேட்டால், அதனை சொல்ல தயாராக இருக்கிறேன். அமித்ஷா சொல்வதை பிரதமர் கேட்டு செயல்படட்டும். பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு 3 முறை வந்துள்ளார். எடியூரப்பாவை விவசாயிகளின் ஆதரவாளர் என்று பிரதமர் பெருமையாக சொல்கிறார். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் முன்வரவில்லை.

விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், அவர் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்திருப்பார். மகதாயி பிரச்சினை குறித்து கூட பிரதமர் பேச மறுக்கிறார். பெங்களூரு மாநகராட்சியில் உள்ள ஆவணங்களை தீவைத்து கொளுத்தியவர்கள் பா.ஜனதாவினர். அவர்கள் ஆட்சியில் தான் மாநகராட்சி கடனில் மூழ்கியது. அவர்கள் வாங்கிய கடனை காங்கிரஸ் அடைத்துள்ளது. பா.ஜனதாவினர் அடமானம் வைத்த மாநகராட்சி சொத்துகளை காங்கிரஸ் மீட்டுள்ளது. ஆனால் பெங்களூருவை பாதுகாப்போம் என்று கூறி பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை ஏமாற்ற பா.ஜனதாவினர் நினைக்கிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story