உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் தேரோட்டம்


உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தில் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. தென்காளகஸ்தி என்று அழைக்கப்படும் இந்த கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. திருமண பொருத்தம், கிரக அமைப்புகளை உணர்ந்து கொள்வதற்காக கோவிலின் முதற்பிரகாரத்தில் காலச்சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது.

இது, நந்திக்கு மேலாக அமைந்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை அம்மன் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோவில் அர்ச்சகர் நீலகண்ட சிவாச்சாரியார் சிறப்பு பூஜை செய்தார். இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

தேனி மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். கோவில் அர்ச்சகர் கொடி அசைக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டம் தொடங்கியதும், கருடன் வட்டமிட்ட காட்சியை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

தேரடியில் இருந்து பஸ்நிலையம், கோட்டைமேடு வழியாக நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து வந்தது. மாலை 3.25 மணி அளவில் தேர் நிலை அருகே வந்தது. அப்போதும், தேரை சுற்றி கருடன் வட்டமிட்டது. அதன்பின்னரே தேர் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த தேரோட்டத்தில் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர், தேவாரம், கோம்பை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் பச்சையப்பன், முன்னாள் எம்.பி. சையதுகான், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட முன்னாள் செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பு சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன், உத்தமபாளையம் ஜமாத்தலைவர் தர்வேஸ்மைதீன், உத்தமபாளையம் அ.தி.மு.க. பேரூர் துணை செயலாளர் ராஜாங்கம், தினகரன் அணியை சேர்ந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டார் ரபீக், ஒன்றிய செயலாளர் அப்துல்காதர் ஜெய்லானி, பேரூர் செயலாளர் கல்யாணசுந்தர் மற்றும் பி.டி.ஆர். விஜய்ராஜன், ஓம் நமோ நாராயண பக்த சபை, பி.டி.ஆர். இறகு பந்து மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story