உதவாது இனி ஒரு தாமதம்


உதவாது இனி ஒரு தாமதம்
x
தினத்தந்தி 2 March 2018 10:38 AM IST (Updated: 2 March 2018 10:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது.

வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதிக்குள் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. இதனால் விரைவில் அறிவிப்பு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத்தரத்தில் அத்தனை மருத்துவவசதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் 1956-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.இங்கு ஒரே குடையின் கீழ் அனைத்து மருத்துவ வசதிகள் அளிக்கப்படுவதுடன், மருத்துவக்கல்வியுடன் மருத்துவ ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த மருத்துவமனைக்காக வருடந்தோறும் மத்திய அரசு 1,096 கோடி ரூபாய் செலவிடுகிறது.

இங்கு நுழைவுக்கட்டணமாக ரூ.10 செலுத்தி விட்டு வருடம் முழுவதும் இலவசமாக சிகிச்சை பெறலாம். உள்நோயாளி என்றால் அதற்கு அனுமதி கட்டணமாக ரூ.25-ம் ஒரு நாளைக்கு ரூ.35-ம் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனை போல சிகிச்சை பெற ‘ஏ’கிளாஸ்,‘பி’ கிளாஸ் என 2 பிரிவுகள் உள்ளன. இதில் அனுமதிக்கட்டணமாக ரூ.200-ம் சாப்பாட்டு கட்டணமாக நாளொன்றுக்கு ரூ.100-ம் கொடுத்து விட்டு ஏ கிளாஸ் சிகிச்சைக்கு ரூ.1,700-ம் பி கிளாஸ் என்றால் ரூ.1,100-ம் செலுத்த வேண்டும்.

. டெல்லியின் புற நகர் பகுதியில் கிளை உள்ளது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ், ராஜஸ்தானில் ஜோத்பூர், மத்தியபிரதேசத்தில் போபால், சத்தீஸ்கரில் ராய்ப்பூர், ஒடிசாவில் புவனேஸ்வரம், பீகாரில் பாட்னா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. 2015-16-ல் ஜம்மு-காஷ்மீர், இமாசலபிரதேசம், பஞ்சாப், அசாம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் இமாசலபிரதேசம், தமிழகம் தவிர மற்ற இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட பணிகள் தொடங்கி விட்டன

இந்த மருத்துவமனை எங்கள் ஊருக்குத்தான் வேண்டும் என்று, தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி(தஞ்சை), புதுக்கோட்டை, பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களை குறிப்பிட்டு ஆளாளுக்கு கொடி பிடித்ததும் தாமதத்துக்கு ஒரு காரணமாகும். எங்கு அமைந்தால் என்ன, தமிழகத்தில் தானே அமையப்போகிறது என்று ஒன்றுபட்டு நின்று குரல் கொடுத்து வென்றெடுப்பதே சாலச்சிறந்ததாகும்.

-குறும்பை கதிரவன்

Next Story