பாதை மாறும் பயணம்


பாதை மாறும் பயணம்
x
தினத்தந்தி 2 March 2018 11:02 AM IST (Updated: 2 March 2018 11:02 AM IST)
t-max-icont-min-icon

மனித வாழ்வில் பஸ் போக்குவரத்து இன்றியமையாதது.

சாமானியர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும், இடம் விட்டு,இடம் சென்று தங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கும் பஸ் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர் மாணவ, மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் பஸ் போக்குவரத்தை நம்பித்தான் உள்ளனர். இந்த நிலையில் திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த பஸ் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கும் வந்தது. இதனால் பஸ் போக்குவரத்து கழகத்துக்கு வருமானம் இரட்டிப்பாக உயர்ந்தது. திடீரென்று கடுமையாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தால் பயணத்தின் போது பொது மக்களுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே ஆங்காங்கே வாக்குவாதம் நடந்தது.

பஸ் கட்டண உயர்வால் வெளியூருக்கு தினமும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.கிராம பகுதிகளில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் நகர பகுதியில் நடக்கும் கட்டிட பணிக்கு தினமும் வந்து செல்கிறார்கள். பஸ் கட்டண உயர்வு இவர்களை கடுமையாக பாதித்து உள்ளது. பஸ் போக்குவரத்துக்கே தங்களின் உழைப்பில் தினமும் 100 ரூபாயை கொடுத்து வருகிறார்கள். பஸ் கட்டண உயர்வு இப்போது கூலித் தொழிலாளர்களையும், பொது மக்களையும் சிந்திக்க வைத்ததுடன் வேறு பாதைக்கு வழிகாட்டி உள்ளது. இவர்கள் அனைவரும் பஸ் பயணத்தை புறக்கணித்து விட்டு சரக்கு வாகனங்களை நாடி வருகிறார்கள். இதனால் பஸ் நிழற்குடைக்கு விடை கொடுத்து விட்டு சாலையோரம் ஒன்று கூடி அந்த வழியாக வரும் சரக்கு வாகனங்களை மறித்து அதில் தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

சரக்கு வாகனங்களில் குறைந்த கட்டணத்தில் தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு சென்று திரும்புகிறார்கள். கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, இப்போது கிராமப்புற பொது மக்களும் தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு சரக்கு வாகனங்களையே முன்பதிவு செய்கிறார்கள். காது குத்து, சடங்கு, திருமணம், போன்ற விழாக்களுக்கு செல்வதற்கும்,கோவில்களுக்கு செல்வதற்கும் பஸ், வேன் பயணத்தை தவிர்த்து சரக்கு வாகனங்களில் சென்று வருகிறார்கள். குறிப்பாக சிறிய திருவிழா என்றால் ஒரு சரக்கு ஆட்டோவில் 20 பேருக்கும் குறையாமல் சென்று திரும்புகிறார்கள். இவ்வாறு சென்று வரும் போது ஒவ்வொருவருக்கும் குறைவான தொகையே போக்குவரத்துக்கு செலவாகிறது என்று தெரிவிக்கிறார்கள்.

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றக்கூடாது என போக்குவரத்து விதிமுறை உள்ளது. இருப்பினும் கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் தொடர்ந்து சரக்கு வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டு நகர்ப்புற பகுதிகளுக்கு வரும்வாகனங்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதமும் விதித்து வருகிறார்கள். ஒரு புறம் அபராதம் விதிப்பு தொடர்ந்து வந்தாலும் மறுபுறம் சரக்கு வாகனங்களில் செல்லும் பயணமும் தொடர்ந்து வருகிறது.

சுப்பு என்ற கட்டிட தொழிலாளி கூறும் போது நாங்கள் இப்போது பஸ்சில் செல்வதை தவிர்க்கிறோம். வேலைக்கு வருவதற்கு லாரி, சரக்கு ஆட்டோவில் ஏறி வருகிறோம். இதனால் எங்களுக்கு போக்குவரத்து செலவு குறைகிறது. பஸ்சில் சென்று வந்தால் ஒரு நாளைக்கு ரூ.100 செலவாகிறது. அதே நேரம் சரக்கு ஆட்டோ, லாரிகளில் பயணித்தால் ரூ.40 முதல் 50-க்குள் செலவு குறைந்து விடுகிறது. இதனால் சம்பள பணத்தில் தினமும் இந்த பணம் மிச்சமாகிறது. இதனால் கட்டிட பணிக்கு தினமும் சரக்கு வாகனங்களில் தான் வந்து செல்கிறோம். அதே நேரத்தில் வேலை இல்லாமல் சில நாள் ஏமாற்றத்துடன் திரும்பும் போது போக்குவரத்துக்கு நாங்கள் உழைப்பே இல்லாமல் கையில் இருந்து காசை கொடுத்து திரும்பக்கூடிய அவல நிலையும் இருந்து வருகிறது என்றார்.

-சுமதி

Next Story