வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது - குமாரசாமி பேச்சு


வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது - குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 3 March 2018 4:30 AM IST (Updated: 2 March 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று குமாரசாமி கூறினார்.

சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய 3 கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

இதில் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் சட்டமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் சிவபிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரியூரில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக விழா நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கலந்து கொண்டு வேட்பாளர் சிவபிரசாத்தை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதில் பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் நாடகமாடி வருகின்றன. முதல்-மந்திரி சித்தராமையா கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.50 ஆயிரம் வரையிலான விவசாயக்கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் விவசாயக்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை.

ஆனால் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் விவசாயக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். காங்கிரசார் நாங்கள்தான் விவசாயிகளின் நண்பன் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் எதையும் அவர்கள் செய்யவில்லை.

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் நான் விவசாயிகளின் தோழன் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் இதுவரையில் கர்நாடகத்தில் உள்ள தேசிய வங்கிகளில் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் எடியூரப்பாவும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

நான் ஆட்சிக்கு வந்தால் முதியோர் உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்துவோம். மேலும் 6 மாதத்திற்கு ஒருமுறை முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும். எங்களது சார்பில் இத்தொகுதியில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்வேன். மேலும் தேர்தல் செலவுக்கும் பண உதவி செய்வேன்.

பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் ஆட்சியை 10 சதவீத கமிஷன் ஆட்சி என்று விமர்சிக்கிறார். முதல்-மந்திரி சித்தராமையா, மத்தியில் ஆளும் பா.ஜனதா தான் 90 சதவீத ஊழல் ஆட்சி என்று கூறுகிறார். இவர்கள் இருவரும் தங்களை ஒருவரையொருவர் மாறி, மாறி விமர்சித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. தேசிய கட்சிகள் இரண்டுமே சண்டை போட்டுக் கொள்கின்றன. அதனால் அவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். வருகிற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் செல்லும் இடமெல்லாம் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பிரசாரத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story