நீர்வரத்து அடியோடு நின்றதால் வைகை அணை நீர்மட்டம் 34 அடியாக குறைந்தது
நீர்வரத்து அடியோடு நின்றதால் வைகை அணை நீர்மட்டம் 34 அடியாக குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வைகை அணை நீர்ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக மதுரை மாநகர மக்கள் அனைவருக்கும் வைகை அணை மட்டுமே பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 34 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது.
வைகை அணைக்கு இக்கட்டான நிலையில் கைகொடுக்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தற்போது குறைந்து காணப்படுகிறது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து கடந்த சில வாரங்களாக அடியோடு நின்றுவிட்டது. இதனால் வைகை அணை நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலை உள்ளது. மேலும் அணையின் நீர்இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால் இருப்பில் உள்ள தண்ணீரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது இருப்பு இருக்கும் தண்ணீரின் மூலம் மதுரை மாநகருக்கு சுமார் 75 நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என்று உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் நீர்ஆவியாதல், பூமி உறிஞ்சுதல் மற்றும் நீர்திருட்டு உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் வினியோகம் செய்யக்கூடிய நாட்களின் எண்ணிக்கை மேலும் குறையும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே வைகை அணையில் 20 அடிவரை வண்டல் மண் படிந்துள்ளதால், தற்போதைய நீர்இருப்பின் மூலம் கோடை காலத்தை கடந்துவிட முடியுமா? என்ற சந்தேகம் பொதுப்பணித்துறையினர் இடையே வலுத்துள்ளது.
நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வரும் நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகரம் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் மதுரை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 34.02 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டும் வினாடிக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர்இருப்பு 553 மில்லியன் கன அடியாக காணப்பட்டது.
Related Tags :
Next Story