விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்


விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2018 3:45 AM IST (Updated: 2 March 2018 11:14 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீரின்றி நெற் பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி எட்டுக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

எட்டுக்குடி ஊராட்சியில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்களுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டுக்குடி கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் மாசேத்துங் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், கண்ணதாசன், பரமசிவம், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. தம்புசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

போராட்டத்தில், எட்டுக் குடி, வல்லம் ஆகிய வருவாய் கிராமத்தில் 500 எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை மண்டல துணை தாசில்தார் அமுதா, வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, வெண்ணாறு பாசனபகுதி உதவி செயற்பொறியாளர் தங்க முத்து, வேளாண்மை உதவி அலுவலர் பாலசுப்பிரமணியன், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியிலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக எட்டுக்குடி-சீராவட்டம் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story